Sunday, 20 January 2013

வடபகுதி மாணவர்களுக்கு இந்தியாவின் புலமைப்பரிசில்

இந்திய அரசினால் வடபகுதி மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு புலமைப்பரிசில் திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக அதிகாரி மகாலிங்கம் தெரிவித்தார். இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக  மேலும் தெரிவித்ததாவது:
ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில்கள் இளமாணிப் பட்டப்படிப்புகள், மருத்துவத்துறை, பொறியியல்துறை ஆகியவற்றில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில்களின் கீழ் நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தினால் மருத்துவம் தவிர்ந்த பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளியல்,வர்த்தகம் மானிடவியல் மற்றும் கலை ஆகிய துறைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும்.
இந்தப் புலமைப்பரிசில்களுக்கான இறுதித் திகதி பெப்ரவரி 10 ஆம் திகதி ஆகும்.
மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம் பொறியியல், விஞ்ஞானம், பொருளியல், வர்த்தகம் மானிடவியல் மற்றும் கலைத்துறைகளுக்கான முதுமாணி பட்டப்படிப்புக்கானது. இந்தப் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவேண்டும்.
ராஜீவ்காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பத்துக்கான இளமாணி பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை பெப்ரவரி 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.
ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பத்தின் ஒரு பிரதியை இந்தியத் துணைத் தூதரகம், 14, மருதடிலேன், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு விண்ணப்பதாரி ஒரு விண்ணப்பப் படிவத்தை மட்டுமே அனுப்பமுடியும்.
இளமாணிப் பட்டப்படிப்புகளுக்கான பொதுத் தகைமைகளாக க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்திருத்தல் வேண்டும். முக்கிய பாடங்களில் "பி' சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
க.பொ.த. சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்தில் "பி' சித்தியைப் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரி முழு நேரமாக எந்தஒரு பல்கலைக்கழகத்திலோ அல்லது உயர் கல்வி நிலையத்திலோ  இளமாணிப் பட்டப்படிப்பு மாணவராகக் கல்வியைத் தொடர்பவராக இருக்கக்கூடாது.
விண்ணப்ப முடிவுத் திகதி அன்று விண்ணப்பதாரி 22 வயதுக்கு குறைந்தவராக இருப்பதுடன் இலங்கைப் பிரஜையாகவும் இருத்தல் வேண்டும். ஏனைய புலமைப்பரிசில்களாக ஐ.ஓ.ஆர்.ஏ.ஆர்.சி. புலமைப்பரிசில்களில் சுதேச வைத்தியத்துறை உட்பட அனைத்துக் கற்கை நெறிகளுக்கான முதுமாணிப் பட்டப் படிப்புகள், பொதுநலவாயப் புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம் தவிர்ந்த அனைத்துப் பாடங்களுக்கான முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகள், "சார்க்' புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம் தவிர்ந்த அனைத்துப் பாடநெறிகளுக்குமான முதுமாணிப் பட்டப்படிப்புக்கள் ஆகியவற்றுக்கு உயர்கல்வி அமைச்சு தகைமை வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
முழுமையாகப் பூர்த்தியாக்கப்பட்ட இளமாணி பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதிக்கு முன்னரும் முதுமாணிப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மருத்துவத்துறை, பொறியியல்துறைகளுக்கான கற்கைநெறிகளுக்கு நுழைவுப்பரீட்சைகள் நடைபெறும் என்றார்.