எமது கல்லூரியின் 400m
ஓடுபாதை கொண்ட மைதானத்தின் முதலாவது இல்ல மெய்வன்மைப் போட்டிகள் கடந்த
செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்களின் தலைமையில் வலிகாமம்
கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.விஜேந்திர சர்மா அவர்கள் பிரதம
விருந்தினராகவும் கனடா பழைய மாணவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர் “விக்ரோறியன்”
மகாராணி யோகலிங்கம் தம்பதிகள் சிறப்பு விருந்தினர்களாகவும் ஓய்வு நிலை ஆங்கில
ஆசிரியர் ”விக்ரோறியன்” திருமதி.செல்வராணி தேவராஜா அவர்கள் கௌரவ விருந்தினராகவும்
கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள்
என ஆயிரக் கணக்கானோர் விளையாட்டு நிகழ்வுகளைக் கண்டு களித்தனர். ஆரம்ப நிகழ்வுகளாக
விருந்தினர்களை வரவேற்றல், மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், கொடியேற்றல், அணி நடை,
ஒலிம்பிக் தீபம் ஏற்றல், சத்தியப் பிரமாணம், பிரதம விருந்தினர் போட்டிகளை
ஆரம்பித்து வைத்தல் போன்றவற்றைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் தொடங்கின. அணி
நடைக் குழுக்கள் பார்ப்பவர் மனதைக் கவரும் வகையில் செயற்பட்டன. அணிவகுப்பு
மரியாதையை விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டனர். இல்ல அலங்காரங்கள் ஒவ்வொன்றும்
மாணவர்களாலும் இல்ல ஆசிரியர்களாலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. மாணவர்கள்
மிக ஒழுங்காகவும் கட்டுப்பாடாகவும் தத்தம் இல்லங்களில் இருந்து போட்டியாளர்களை
ஊக்குவித்தார்கள். இடைவேளையின் போது இடம்பெற்ற “காட்சியும் கானமும்” நிகழ்ச்சியை
கண்டு அனைவரும் தம்மை மெய்மறந்தனர். எமது கல்லூரியின் முன்னாள் நடன ஆசிரியை
திருமதி.ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களின் நெறிப்படுத்தலில் 300க்கும் மேற்பட்ட
மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இம் மாணவர்களைத் தயார்ப்படுத்தலில் “விக்ரோறியன்”
செல்வி.பாதுஜா தர்மதேவன் (நுண்கலைப் பீட மாணவி) உதவியாளராக செயற்பட்டிருந்தார்.
விருந்தினர் உடபட கலந்து கொண்ட அனைவரும் இந் நிகழ்ச்சியை மிகவும்
புகழ்ந்தனர்.
கயிறிழுத்தல், பழைய
மாணவர்களுக்கான நிகழ்ச்சி, உத்தியோகஸ்தர்களுக்கான நிகழ்ச்சி என்பவற்றைத் தொடர்ந்து
பரிசளிப்பு நடைபெற்றது. இம்முறை கனகரத்தினம் இல்லத்தினர் அதி கூடிய புள்ளிகளைப்
பெற்று இல்ல மெய்வன்மைப் போட்டியின் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
விளையாட்டுத் துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன் அவர்களின் நன்றியுரையுடன் இவ்
வருட இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சிறப்பாக நிறைவடைந்தன.