Saturday, 19 July 2014

பொறியியல் துறை மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கல்

எமது கல்லூரியிலிருந்து சென்றாண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி இவ் வருடம் பொறியியல் துறைக்குத் தெரிவுசெய்யப்படும் இரண்டு மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் வைபவம் இன்று கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் அதிபர் திருமதி.ச.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக பொறியியல் துறைக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு பழைய மாணவர்களினதும் அவுஸ்ரேலியா (மெல்போன்) பழைய மாணவர் சங்கத்தினதும் அனுசரணையுடன் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
இவ்வருடம் அவுஸ்ரேலியா (மெல்போன்) பழைய மாணவர் சங்கத்தின் மூலம் ”விக்ரோறியன்” க.செந்தில்நாதன் அவர்கள் இதற்கான நிதியினைப் பெற்று வழங்கியிருந்தார். இன்றைய நிகழ்வின் போது அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த ”விக்ரோறியன்” திரு.அ.சதானந்தவேல் அவர்களும் திருமதி.கந்தசாமி அவர்களும்  இம் மாணவர்களுக்கு மடிக்கணனிகளைத் தம் கரங்களினால்வழங்கினார்கள். 

கலைச்சொல் அகராதி (Encyclopedia) முழுமையாக இறுவட்டுகளில் பதிவுசெய்யப்பட்ட பிரதிகளை கல்லூரி நூலகத்திற்கு திரு.அ.சதானந்தவேல் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

பொறியியல் பீடத்துக்கு தெரிவாகும் செல்வன்.திருமூர்த்தி சேந்தன், செல்வி.சாருஜா செந்தில்நாதன் இருவரும் இவ்வுதவியை வழங்கிய அவுஸ்ரேலியா பழைய மாணவர் சங்கத்திற்கு (மெல்போன்) நன்றி தெரிவித்தனர்.திரு.அ.சதானந்தவேல், ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன், பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன் ஆகியோர் உரையாற்றினார்கள். பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் Dr.செ.கண்ணதாசன் அவர்கள் நன்றி கூறினார்.


Mahindodaya Technical Laboratory - Work In Progress‏


See More Photos

Special project for Grade 06 - Weak Students‏

எமது கல்லூரியில் தரம் 6 வகுப்பில் இணைந்த கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் செயற்றிட்டம் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. லண்டனில வதியும்  விக்ரோறியன் கந்தசாமி வினோதன், யேர்மனில் வதியும் சிவகரன் சிவராஜா மற்றும் கனடாவில் வதியும் ஸ்ரீரூபன் சின்னத்தம்பி ஆகியோரின்  அனுசரணையுடன் பெறப்பட்ட நிதியின் மூலமாக இம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முதற்கட்டமாக தமிழ், கணிதம் ஆகிய பாடங்கள் இம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.

Mr.N.T.V.R. Donated Steel Cupboards‏

அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த எமது பழைய மாணவர் N.T.V.இராசலிங்கம் அவர்கள் அதிபர்
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று அலுமாரிகளை கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். 
மனையியல் கூடத்திற்காக கண்ணாடி பொருத்திய அலுமாரியும் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்காக ஒரு 
அலுமாரியும் காரியாலயத் தேவைகளுக்காக ஒரு அலுமாரியும் கிடைத்துள்ளன. 
எமது முன்னாள் பிரதி அதிபர் திரு.சி.க.இந்திரராஜா மூலமாக இந்நிதி பெறப்பட்டது.

Tuesday, 1 July 2014


Visit - Mr&Mrs.N.T.V.Rajalingam

அவுஸ்ரேலியாவிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்த எமது சிரேஸ்ட பழைய மாணவர்களான திரு.திருமதி.N.T.V.இராஜலிங்கம் தம்பதியினர் கல்லூரிக்கு வருகை தந்து எமது புதிய அதிபருடன் கல்லூரியின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்கள். முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் தம்பதியினரை அதிபர் திருமதி.ச.சிவகுமார் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரியை சுற்றிப் பார்வையிட்ட NTVR தம்பதிகள் தற்போது அமைக்கப்பட்டு வரும் மஹிந்தோதய தொழில்நுட்பக் கூடம் பற்றியும் தகவல்களை கேட்டறிந்து கொண்டனர். தான் தவணை தோறும் மாணவர்களுக்கு வழங்கும் கற்றலுக்கான ஊக்குவிப்பு உதவித்தொகையினையும் அதிபரிடம் 
கையளித்ததுடன் கல்லூரியின் தேவைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள். அத்துடன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சில மாணவர்களையும் சந்தித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.

Essay Competition

இலங்கை இந்திய சங்கம் நடாத்திய மகாத்மா காந்தி ஞாபகார்த்தக் கட்டுரைப் போட்டியில் எமது கல்லூரி மாணவி செல்வி.ரூபிணி பாலச்சந்திரன் தேசியரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். ஆங்கில மொழி மூலமான இக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற இவர் அண்மையில் இந்திய தூதரகத்தால் கொழும்பில் தங்கப்பதக்கம் சூட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.