Sunday, 10 February 2013

தை அமாவாசை : தலைமுறைகள் செழிக்க வழிபடுங்களேன

பூலோகம் வந்த முன்னோர்கள் மீண்டும் பிதுர்லோகம் செல்லும் தை அமாவாசை நாளில் புனித நீராடி, அவர்களுக்கு எள்ளும் நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள். பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்திலிருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறை வேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர்.


அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள் ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும். நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவபுண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்றவேண்டும். தேவர்களின் தேவன் அதிதியின் புதல்வரான ஆதித்யன் அதாவது சூரியன் தேவர்களில் முக்கியமானவர். கண்களுக்குப்புலப்படும் தேவன் சூரியன் ஆகையால் ஒட்டு மொத்த தேவர்களின் பிரதிநிதியாக அவரைப்போற்றுகிறோம். அமாவாசை தினத்தில் அவருக்குப்பெருமை அதிகம் அது சந்திரனோடு அவர் சேர்ந்திருக்கும் நாள் என்கின்ற வேதங்கள். சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயனம் என்றும் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் கூறப்படுகிறது. உத்தராயணத்தில் பகல் பொழுது அதிகமாக இருக்கும். வேதம் சொல்லும் அத்தனை விஷயங்களுக்கும் உலக நன்மையை ஏற்படுத்துவது என்பதோடு மட்டுமல்லாமல் திருமணம் முதலிய அன்றாட வாழ்க்கையின் செழிப்பை ஏற்படுத்தும் செயல்களையும் உத்தராயணகாலத்தில் செய்யவேண்டும். என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்துகிறது. சிறப்பு தரும் அமாவாசை அயனத்துக்கு ஓர் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. தெற்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை ஆடி அமாவாசை, வடக்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை தை அமாவாசை. ஆன்மிக முன்னேற்றத்துக்கு பித்ருக்களை ஆராதிப்பது கை கொடுக்கும். மனதுக்குத் தெம்பை, மனோபலம், உடல்பலம் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஆகையால் ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசையில் முன்னோர்களை வழிபட வேண்டும். முன்னோர்கள் வரும் ஆடி அமாவாசை பிதுர் எனப்படும் நம் முன்னோரின் திசை, தெற்கு. இதனால் தான், ஊரின் தென்திசையில், மயானம் அமைக்கின்றனர். சூரியனின் தென்திசை பயண காலமான ஆடி மாதம் அமாவாசையன்று, பிதுர்கள் பூமிக்கு வர ஆரம்பிக்கின்றனர். புரட்டாசி மாத அமாவாசையன்று மொத்தமாக கூடுகின்றனர். இதை, மகாளய அமாவாசை என்பர். முன்னோர்களை வழி அனுப்பும் நாள் முன்னோர்கள் தை அமாவாசையன்று, மீண்டும் பிதுர்லோகம் திரும்புகின்றனர். ஆக, ஆடி அமாவாசையன்று, முன்னோரை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இதனால் தான், 12 அமாவாசைகளும், முன்னோருக்கு திதி கொடுக்க முடியாத சூழ்நிலையில், இந்த மூன்று அமாவாசைகளுமாவது கொடுக்கட்டும் என முக்கியத்துவம் தந்துள்ளனர். எள்ளும் நீரும் போதும் முன்னோர் நம்மிடம் பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் தேவை, எள்ளும், நீரும் மட்டுமே. அவற்றை புண்ணியத்தலங்களுக்குச் சென்று கொடுக்க வேண்டும். அகத்தியர் தீர்த்தம், குமரி தீர்த்தம். ராமேஸ்வர தீர்த்தம் என்றெல்லாம் சொல்கிறோம். அகத்திய முனிவரின் பாதம் பட்ட இடம், பாபநாசத்திலுள்ள அகத்திய தீர்த்தம். பெருமாளும், லட்சுமியும், ராமன், சீதை எனும் மனிதர்களாகப் பிறந்து, கால் பதித்த இடம் ராமேஸ்வரம். அம்பாள் கன்னி பகவதியாக பிறந்து, பாதம் பதித்த தலம் கன்னியாகுமரி. ஞானிகள் மற்றும் தெய்வ சம்பந்தத்தால்,
 இங்கே போய் திதி கொடுக்கும் போது, நம் பாவம் மட்டுமல்ல, முன்னோர் செய்த பாவமும் தீர்ந்து, பரம்பரைக்கே நன்மை ஏற்படுகிறது. அன்னதானம் செய்யுங்கள் அது மட்டுமல்ல... அமாவாசையன்று, அன்னதானம், ஆடை தானம், அரிசி, காய்கறி தானம் செய்ய வேண்டும். இதனால், நமக்கு செல்வச்செழிப்பு உண்டாகும். நிறைந்த அமாவாசை அன்று துவங்கும் சுபநிகழ்ச்சிகளுக்கு, முன்னோரின் ஆசி கிடைக்கும். தன் முன்னோர் மோட்சம் செல்லாமல், திண்டாடுவதைக் கண்ட பகீரதன், கடும் பிரயத்தனம் செய்து, கங்கையையே பூமிக்கு கொண்டு வந்து, அவர்களுக்கு விமோசனம் அளித்தான் என்கிறது புராணம். புனித நீராடுங்கள் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தை அமாவசை சிறப்பாக வழிபடப்படுகிறது. கன்னியாகுமரி, பாபநாசம், குற்றாலம், ஏரல், திருச்செந்தூர் ,உள்ளிட்ட பகுதிகளிலும், வடக்கே வேதாரண்யம், உள்ளிட்ட கடல் சார்ந்த பகுதிகளிலும்,மறைந்த நம் முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி இறைவனை வழிபடுவது மரபு. எனவே போற்றுதலுக்கு உரிய நம் முன்னோர்களை தை அமாவாசையன்று வழிபட்டு புண்ணியத் தலங்களில் நீராடினால் எண்ணற்ற பலன்களும் புண்ணியங்களும் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.