க.பொ.த.உயர்தர வணிகத்துறை மாணவர்களுக்காக திரு.க.வினோதன் அவர்களின் ஏற்பாட்டில் ஐக்கிய ராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடனான கருத்தரங்கின் இரண்டாம் நாள் விரிவுரைகள் கல்லூரி அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் தலைமையில் இன்று இடம்பெற்றன. பிரபல பொருளியல் ஆசான் “விக்ரோறியன்” திரு.ஜெயக்குமார் பொருளியல் பாடம் தொடர்பான செயலமர்விளை முதலில் நிகழ்த்தினார். தொடர்ந்து திரு.வினோதன் அவர்களின் தொழில் வழிகாட்டல் தொடர்பான ஆலோசனையுரை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வணிக பீட முகாமைத்துவத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் கணக்கீடு தொடர்பான விரிவுரை அடுத்து நடைபெற்றது. இன்றைய இரு வளவாளர்களும் கணக்கீடு, பொருளியல் பாடங்களுக்கான பரீட்சைகளின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் விடை எழுதும் முறைமை தொடர்பாகவும் வினாக்களை அணுகும் விதம் குறித்தும் நீண்ட விளக்கம் கொடுத்தனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வுகளையும் வழங்கினர். குறித்த பாடங்கள் தொடர்பான கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தேநீர், சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. கருத்தரங்குகளின் நிறைவில் மாணவர்களிடமிருந்து செயலமர்வு தொடர்பான விமர்சனங்கள் எழுத்து மூலமாகப் பெறப்பட்டன. மிகவும் திருப்தியாக இரு நாள் அமர்வுகளும் இருந்ததாக மாணவர்கள் கருத்துத் தெரிவித்ததுடன் தமக்காக இரு நாட்களை செலவு செய்த விரிவுரையாளர்களுக்கும் திரு.க.வினோதன் அவர்களுக்கும் மற்றும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்துக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.