அடைவு மட்டம் உயர்வடைந்தால்தான் கல்வித் தரத்தைப் பேண முடியும்வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவிப்பு |
வடமராட்சிப் பிரதேசம் கல்வியில் முன்னணியில் திகழும் பிரதேசம் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். கல்வியின் அடைவு மட்டங்கள் உயர்வடைய வேண்டும்.
அடைவுமட்டம் உயர்வடையும்போது கல்வியின் தரநிலையைப் பேண முடியும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத் தியசீலன் தெரிவித்தார்.
புலோலி புற்றளை மகாவித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சத்தியசீலன் இவ்வாறு தெரிவித்தார்.
அதிபர் ந.அனந்தேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சத்தியசீலன் மேலும் தெரிவித்ததாவது:
இன்றைய மாணவர்கள் கல்வியில் தலைசிறந்து விளங்க வேண்டும். கல்வி உயர்வினால் தான் மாணவர் ஒருவர் சமூகப் பற்றுள்ள நற்பிரஜையாக உருவாகமுடியும்.
எதிர்கால சந்ததியினர் சமய அறிவுடன் கல்வியில் மேன்மையடைய வேண்டும் என்பதற்காகவே கோயில்களுடன் பாடசாலைகளையும் ஆரம்பித்தார்கள்.
அவ்வாறே இந்தப் பாடசாலையான புற்றளை மகாவித்தியாலயமும், புற்றளைப் பிள்ளையார் ஆலயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பாடசாலைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்தப் பாடசாலை பல அறிஞர்களையும், கல்விமான்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும். கல்வியே எமது அழியாச் சொத்து என்பதை நாமனைவரும் மறந்துவிடக்கூடாது. இந்தக் கிராம மக்களுடன் புலம் பெயர் வாழ் மக்களும் இந்தப் பாடசாலை அபிவிருத்திக்கு உதவி வருவதையறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தப் பாடசாலை சமூகத்தின் தேவைகளை மேம்படுத்துவதில் முன்னிலையில் செயற்பட வேண்டும்.
மாணவர்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு இறைபக்தியோடு பெரியோர்களை மதித்து வாழ வேண்டும். பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் எதிர்காலத்தில் மேல் நிலையடைந்து உயர்வான வாழ்க்கையைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை என்றார்.
|