Tuesday, 31 December 2013

New Year Message from Victoria College Principal

2013ஆம் ஆண்டு விடைபெற 2014ஆம் ஆண்டு உதயமாகிறது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 2013ஆம் ஆண்டில் எமது கல்லூரி சகல துறைகளிலும் வளர்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது. பொதுப்பரீட்சை அடைவுமட்டங்கள் அதிகரித்துள்ளன. இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதிகளவு முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மாணவர்கள்  சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். 
2013ஆம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி சென்ற வருடங்களை விட கூடுதலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை இரு மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். தேசிய மட்ட மெய்வன்மைப் போட்டிகளில் வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளிப்பதக்கம் வெல்லப்பட்டுள்ளது. 
நீண்டகாலக் கனவாயிருந்த இரண்டு திட்டங்கள் நனவாகியுள்ளன. தரமான தேநீர்ச் சாலை ஸ்தாபகர் குடும்பத்தினரதும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தினதும் அனுசரணையில் நிறைவாகியுள்ளது. பழைய மாணவர் சங்கம் 400m ஓடுபாதை கொண்ட மைதான அமைப்புக்கான காணியினை கனடா பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன் கொள்வனவு செய்துள்ளது. இவ்விரு திட்டங்களையும் செயல் வடிவப்படுத்திய 2013 மறக்கமுடியாத ஆண்டாகும். அத்துடன் அரசாங்கத்தின் இசுறு திட்டத்தின் கீழான பௌதீக வள உபகரிப்புக்களும் நிறைவடைந்துள்ளன. 
இவ்வாண்டில் ஐக்கிய ராச்சியத்திலிருந்து திரு.க.ஆனந்தகுமார் கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி ஊக்குவிப்புச் செய்திருந்தார்.
வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் நூலகங்களில் எமது கல்லூரி நூலகம் 2ஆம் இடத்தை வகிக்கும் தெரிவும் இவ்வாண்டிலேயே இடம்பெற்றது. அவுஸ்ரேலிய பழைய மாணவர் சங்கம் (மெல்போன்) 2013இன் ஆரம்பத்தில் சிறப்பான கணனிக்கூடத்தை (Asaippillai Teacher Memorial ICT Lab) அமைத்துக் கொடுத்தது. இதனூடாக க.பொ.த.உயர்தர வகுப்புக்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்தை அறிமுகம் செய்யக்கூடியதாக அமைந்தது. 
இவற்றினை விட பழைய மாணவர் சங்கங்கள் (சுழிபுரம், கனடா, அவுஸ்ரேலியா, ஐக்கிய ராச்சியம்) மற்றும் பழைய மாணவர்கள் விளையாட்டு, தமிழ்த் தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகளுக்காக மாணவர்களின் போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கும் புலமைப்பரிசில்கள், உதவித்தொகைகள் போன்றவற்றிற்கும் 2013இல் பெருமளவில் உதவியுள்ளனர்.
இவை யாவற்றுக்குமாக விக்ரோறியா சமூகம் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றது. இவ்வுதவிகளுக்கு எமது மாணவர்கள் மிகுந்த பொறுப்புக் கூறுபவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் 2014ஆம் ஆண்டு மேலும் சிறப்புத் தரவேண்டுமென வாழ்த்தி வரவேற்கின்றோம்.