ஐக்கிய ராச்சியத்தின் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக
உறுப்பினர் விக்ரோறியன் சி.இரவிசங்கர் அண்மையில் தனது பிறந்த மண்ணுக்கு வருகை
தந்தார். இவர் தனது சகோதரர் அமரர் சி.சிவசங்கர் அவர்களின் ஞாபகார்த்தமாக தான்
அமைத்த பாரதி முன்பள்ளிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்குமுகமாக ஏற்பாடு
செய்யப்பட்ட விழா நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சுழிபுரம் கல்வி அபிவிருத்திக்
குழுவின் (EDC) மேற்பார்வையில் நவீன முறையில் இம்முன்பள்ளி
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
விக்ரோறியாக் கல்லூரியில் திரு.சி.இரவிசங்கர் கற்ற காலத்தில் சிறந்த சாரண
வீரராகத் திகழ்ந்தவர். தற்போது கல்லூரியின் சாரணர் அமைப்புக்கு பல்வேறு வழிகளில்
இவர் உதவி வருகின்றார். சென்ற வாரம் கல்லூரிக்கு வருகை தந்த இரவிசங்கர் அவர்கள்
சாரணச் சிறார்களுக்கு சின்னம் சூட்டியதுடன் காங்கேசன்துறை சாரணர் மாவட்டம் நடாத்திய
போட்டிகளில் வெற்றி பெற்ற சாரணர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
சாரணப் பொறுப்பாசிரியர்களான திரு.செ.சிவகுமாரன் (உபஅதிபர்),
திரு.சி.நிரஞ்சதுர்க்கன் ஆகியோர் இந்நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தனர்.