Monday, 24 December 2012

வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படித்தான்!

லீhர, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம் - இடம் உயிரினங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது: ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணனன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும் ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பிட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது. என் பகவானை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான். அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆக வேண்டும். திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது. மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் ஆகையால் மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப்பெறும். இதுவே விமோசனம் தரவல்லது. இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம். ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்? ஏகாதசி விரதம் எல்லாரும் இருக்க வேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொண்டுகொள்ள வேண்டும். இதனை அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய அபூர்ணாசீதி வத்ஸர! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------

முக்கோடி ஏகாதசி

மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11 வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒரு வேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும்.
துளசி நீர் குடிக்கலாம். உடல் நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக் கூடாது. மறு நாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இயலாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்ளலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். பாரணைக்குப் பின் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று துளசி இலை பறிக்கக் கூடாது. முதல் நாள் பறித்த இலைகளை பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் பயன்படுத்தலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருப்பதால் மார்கழி ஏகாதசியை வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்பர். கோயில்களில் பெருமாள் இந் நாளில் பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். இதன் வழியாக கோயிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. ஏகாதசிக்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானது. இவ் விரதத்தால் செல்வ வளமும், புண்ணிய பலனும் கிடைக்கும்