Monday, 31 December 2012

வடமாகாண கல்விப் பிரிவின் ஆளணி விரைவில் சீராக்கம்

முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட புதிய ஆளணிக் கொள்கைக்கு அமைய வடமாகாண கல்விப்பிரிவின் நிர்வாகச் செயற்பாடுகளில் ஆளணியினர் சீராக்கம் செய்யப்படவுள்ளனர் என்று வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
இதன்படி ஆளணிவளம் சில இடங்களில் அதிகரிக்கவும், சில இடங்களில் குறைவடையவும் உள்ளது. அதாவது ஆளணியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
முகாமைத்துவ சேவைத்திணைக்களம் வெளியிட்ட புதிய ஆளணிக் கொள்கைக்கு அமைய அந்த மாற்றம் செயற்படுத்தப்படும். நாளைமறுதினம் முதலாம் திகதி தொடக்கம் அது ஒழுங்கமைக்கப்படும்.
வடமாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பாக வன்னிப் பிரதேசத்திலிருந்து இடமாற்றம் பெறவுள்ள ஆசிரியர்களின் விவரங்களும், அவர்களுக்குப் பதிலீடாக இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள ஆசிரி யர்களின் விவரங்களும் வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய விசேட இடமாற்ற சபை மூலமாக பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இடமாற்ற சபை மாகாணக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் ஏனைய இடமாற்ற சபை உறுப்பினர்களுடன் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை முஸ்லிம் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர்.
இந்தச் சபையின் நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தப்பட்டு ஆளுநரின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்