2013ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. அதற்காக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து நூற்று அறுபத்து நான்கு பரீட்சை மத்திய நிலையங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இம்முறை கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்து ஐநூற்று அறுபது பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
மேலும் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் போது இடம் பெறும் முறைகேடுகள் குறித்து தெரிவிக்க பரீட்சைகள் திணைக்களம் 24 மணி நேர இணையதள சேவை ஒன்றையும் நேற்று ஆரம்பித்துள்ளது.
அத்துடன் பரீட்சைகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களைத் தெரிவிப்பதற்கு 011 2784208, 011 2784537, 011 3188350 மற்றும் 1911 ஆகியஎண்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும்.
பரீட்சைக்கு இடையூறாக பொது கூட்டங்கள், ஒலி பெருக்கியை சத்தமாகப் போடுதல் ஆகியவை இடம்பெறக் கூடாது. அவ்வாறு மேற்கொள்ளப்படுமாயின் இது குறித்த தகவல்களை பொதுமக்கள் பொலிசாருக்கு 011 2421111 ,0112784422 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கலாம்.
மேலும் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதியிலிருந்து செப்ரெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இடம் பெறும் .
மேலும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு மூன்று இலட்சத்து இருபத்தொன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து ஐந்து பேர் தோற்றவுள்ளனர்.
இதற்காக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பத்து ஆறு பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.