Monday, 24 December 2012

கல்வி பொதுத் தராதர பரீட்சை

கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 30ஆம் திகதி ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் 78 பாடசாலைகள் விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளது.

அதன்படி குறித்த 78 பாடசாலைகளும் 2013 ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 10ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறாத பாடசாலைகள் ஜனவரி 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது விஞ்ஞான பாட வினாத்தாள் ஏற்கனவே வெளியாகியமை குறித்தும் அதற்காக ஆசிரியர் ஒருவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஓ/எல் விஞ்ஞான பரீட்சையில் 19 கேள்விகளுக்கு முழுப் புள்ளி

க.பொ.த. சாதாரண தர விஞ்ஞான பாட வினாத்தாள், பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியாகியது உண்மை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் 19 வினாக்களுக்கும், பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் வினாத்தாள் வெளியாகியுள்ளமை உறுதியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மூவர் கைது
இதேவேளை, சாதாரண தர விஞ்ஞான பாட வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக வெளியிட்ட சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் உள்ளிட்ட இருவர் மற்றும் இம் மூவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓ/எல் பரீட்சை எழுதாத மாணவர்களுக்கு விசேட பரீட்சை நாள் அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பரீட்சைக்கு தோற்றமுடியாமல் போன மாணவர்களுக்கு விசேட பரீட்சை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சீரற்ற காலநிலை காரணமாக பல மாணவர்கள் கணிதம் மற்றும் அழகியற்கலை பாட பரீட்சையினை எழுத முடியாது போனது.

இவ்வாறு எழுதத்தவறிய மாணவர்களுக்காக விசேட பரீட்சை நாட்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இந்த பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் இப்பரீட்சைகளிற்கு முகங் கொடுக்கவில்லை. மாணவர்களது நலனைக் கருத்திற் கொண்டு விசேட பரீட்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.