வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கென உலகவங்கி மொத்தம் 540 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
உலக வங்கியின் இலங்கைக்கான பல்வேறு
துறைகளுக்கான நிதி உதவியில் வடமாகாண பாடசாலைகளுக்கென 540 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடமாகாணப் பாடசாலைகள் அபிவிருத்திக்கு என உலக வங்கியின் 5 ஆண்டுகள் திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டுக்கான பாடசாலைகள் அபிவிருத்திக்கென 390 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய மூன்று வருடங்களுக்கான நிதித்தொகை குறித்துப் பின்னர் அறிவிப்பதாக உலக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடமாகாணத்திலுள்ள 12 வலயங்களுக்கும் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும். பாடசாலைக் கட்டடங்கள், ஆய்வுகூடங்கள், கணினி உபகரணங்கள் கொள்வனவு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் நடத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது என்று சத்தியசீலன் மேலும் தெரிவித்தார்.