எமது கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் சென்ற
ஞாயிற்றுக்கிழமை றிஜ்வே மண்டபத்தில் முதல்வர் திரு.செ.சிவகுமாரன் தலைமையில்
நடைபெற்றது. பெருந்திரளான பெற்றோர்கள், ஆசிரியர்கள் வருகை தந்திருந்தனர்.
தலைமையுரையை அதிபர் அவர்கள் நிகழ்த்துகையில் மாணவர்களின் கல்வியார்வம்,
விளையாட்டுத்துறையார்வம், கலைத்துறை ஈடுபாடு என்பவற்றை விருத்தி செய்து சிறப்பான
முறையில் முன்னெடுத்து வரும் ஆசிரியர்களையும் அதற்கு உறுதுணையாகவுள்ள
பெற்றோர்களையும் பாராட்டினார். செயலாளரின் வருடாந்த அறிக்கை மற்றும் பொருளாளரின்
கணக்கறிக்கை என்பன சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்து கலந்து
கொண்டதுடன் சிறப்புரையும் வழங்கினார். அவர் தனதுரையில் இவ்வருடத்தில் இலங்கையின்
சகல பாடசாலைகளிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்ற பாடசாலை அபிவிருத்திக் குழு
பற்றிய விளக்கங்களை வழங்கினார். அபிவிருத்திக்குழுவின் நிர்வாகக் கட்டமைப்பு,
வங்கிக் கணக்கு நடைமுறைப்படுத்தல், செயற்பாடுகள் குறித்தும்
விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. பதவி வழியில் அதிபர்
தலைவராகவும் பிரதி அதிபர் உப தலைவராகவும் செயற்படுவார்கள். செயலாளராக “விக்ரோறியன்“
Dr.செ.கண்ணதாசன் (சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ
பீடம்)அவர்கள் ஒருமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். உப செயலாளராக “விக்ரோறியன்“
திரு.பா.விஜயகுமார் (பிரதம நூலகர், வலிகாமம் மேற்கு பிரதேச சபை நூலகம்) அவர்களும்
பொருளாளராக “விக்ரோறியன்“ திரு.நா.ரமணன் (ஆசிரியர்) அவர்களும் ஏகமனதாகத்
தெரிவுசெய்யப்பட்டனர். 15 பேர் கொண்ட நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது. எமது
கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வசிக்கின்ற பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக
நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய காரியதரிசியின் நன்றியுரையுடன்
கூட்டம் நிறைவுற்றது.
See More Photos
See More Photos