Thursday, 31 October 2013

தமிழர்கள் கல்வியில் மீண்டும் வரலாறு படைத்திட... Article by Dr S.Kannathasan (Victoria Old Student) Published on Newspaper Valampuri

"கல்வியிலே தலை சிறந்தவர்கள்" என்று எதிரிகளால் கூடப் பாராட்டப்பட்டவர்கள் நாங்கள். இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும்  தமிழர்களால் நிரம்பி வழிந்தும், பெரும்பாலான உயர் பதவிகளைத் தமிழர்கள் அலங்கரித்ததும் வரலாறு.
Read More

Wednesday, 30 October 2013

முத்தமிழ் விழா

எமது கல்லூரியில் இவ்வாண்டுக்கான முத்தமிழ் விழா இன்றைய தினம் றிஜ்வே மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. முத்தமிழ் மன்றத் தலைவி செல்வி.அனோஜிதா சிவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ”விக்ரோறியன்” செல்வி.இ.இராதா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இசை, நடனம், ஆதிவாசிகள் நடனம், நாட்டுக்கூத்து, நாடகம், பாராளுமன்ற அமர்வு போன்ற பல சுவையான நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற்றன. தமிழ்த்துறை, அழகியல்துறை சார்ந்த ஆசிரியர்களின் வழிப்படுத்தலில் மாணவர்களின் பல்வேறு திறன்களையும் வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக இவை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் நடைபெற்ற தமிழ்த்தினப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

Tuesday, 29 October 2013

World Bank Visit

இன்று எமது கல்லூரியின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக உலகவங்கியின் இலங்கைப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாகாண, வலயம் என்பவற்றைச் சார்ந்த கல்வி அதிகாரிகளும் கல்லூரிக்கு வருகை தந்தனர். 
பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள், இணைப்பாடவிதான வெற்றிகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் விருத்திக்கான செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடியும் ஆவணங்களைப் பார்வையிட்டும் திருப்தி தெரிவித்தார்கள். ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எமது கல்லூரி செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதும் ஆலோசனைகள் வழங்குவதும் இவர்களின் வருகையின் நோக்கமாயிருந்தது. எமது ஊட்டல் பாடசாலையான ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலைக்கும் சென்ற இக்குழுவினர் அங்கும் பாடசாலை வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடி திருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
 

Monday, 28 October 2013

சாரணர் பிரதம ஆணையாளர் விருது

எமது கல்லூரியின் சாரணவீரர் நிரோஜன் இலங்கையின் இரண்டாவது சாரணர் உயர் விருதாகிய பிரதம ஆணையாளர் விருதினைப் பெற்றுள்ளார். க.பொ.த.உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் இவர் பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குகொள்பவராவார். மாணவமுதல்வராகவும் பணியாற்றுகின்றார். அண்மையில் நடைபெற்ற வருடாந்த சாரணர் மாவட்ட ஒன்றுகூடலின் போது நிரோஜன் பிரதம ஆணையாளர் விருதினை மாவட்ட சாரண ஆணையாளரிடம் பெற்றுக்கொண்டார். அடுத்த விருதாகிய ஜனாதிபதி விருதினைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவரைக் கல்லூரியின் சாரணப் பொறுப்பாசிரியரும் மாவட்ட உதவி ஆணையாளருமான திரு.செ.சிவகுமாரன் (கல்லூரி உபஅதிபர்) அவர்கள் வழிப்படுத்துகின்றார்.

Thursday, 24 October 2013

மரண அறிவித்தல்- திரு கந்தசாமி சின்னத்தம்பி

அன்னை மடியில் : 13 டிசெம்பர் 1930 — ஆண்டவன் அடியில் : 23 ஒக்ரோபர் 2013

சுழிபுரம் பறாளை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னத்தம்பி அவர்கள் 23-10-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரிக்கா(பிரான்ஸ்), இரவிச்சந்திரன்(பிரான்ஸ்), ஜெயச்சந்திரன்(பிரான்ஸ்), அருட்சந்திரன்(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(இலங்கை), விக்னேஸ்வரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராஜா(பிரான்ஸ்), மங்களலட்சுமி(பிரான்ஸ்), கௌரிமனோகரி(பிரான்ஸ்), ஜெயராணி(பிரான்ஸ்), கிருஸ்ணமாலா(இலங்கை), ரேணுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Tuesday, 22 October 2013

Certificate Issuing Ceremony - Scouts

சாரணர் பாசறைகளில் பங்குபற்றி மாவட்ட நிலையில் வெற்றி பெற்ற சாரணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரியில் நடைபெற்றது. காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தினைத் தொடர்ந்து சாரணர் பொறுப்பாசிரியர்களின் வழிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அதிபர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Monday, 21 October 2013

G.C.E (O/L) exam view project

இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெறுகின்றன. வலிகாமம் கல்வி வலயத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வகுப்புக்கள் காலை பாடசாலை ஆரம்பமாகும் முன்னர் ஒரு மணி நேரமும் மாலை பாடசாலை நிறைவடைந்த பின்னர் ஒரு மணி நேரமும் நடைபெறுகின்றன. கல்லூரியின் பிரிவுத்தலைவர் திரு.நா.திருக்குமாரன் அவர்கள் இத்திட்டத்தின் இணைப்பாளராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிப்படுத்துகின்றார். பிரதான பாடங்களான கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், வரலாறு, தமிழ் ஆகியவற்றிற்கு கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டு பரீட்சையை மையமாகக் கொண்டு இத்திட்டம் நடைபெறுகின்றது. இன்று முதல் மேற்கூறிய பாடங்கள் ஒவ்வொரு நாளும் முழுநாட் செயலமர்வுகளாக மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு கருத்தரங்குகளாக முன்னெடுக்கப்படுகின்றன. எமது கல்லூரி மாணவர்களுடன் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை என்பவற்றின் மாணவர்களும் இணைந்துள்ளனர். க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் பரீட்சை அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 
 

Scout Ralley

காங்கேசன்துறை சாரணர் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மூன்று நாள் பாசறை நிகழ்வுகள் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றன. எங்கள் கல்லூரியின் 38 சாரண துருப்பினர் சாரண ஆசிரியர்களான திரு.செ.சிவகுமாரன் (மாவட்ட உதவி ஆணையாளர்), திரு.சி.நிரஞ்சதுர்க்கன், திரு.பொ.சுதாகரன், திரு.க.கோகிலன் ஆகியோரின் வழிப்படுத்தலில் இப்பாசறையில் பங்குகொண்டனர். முதல் இரு நாட்களும் கல்லூரியில் பாசறை அமைத்து சிறப்பாக தமது பாசறை நிகழ்வுகளை ஆற்றினர். மூன்றாம் நாள் சாரண மாவட்ட நிலையிலான போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றபோது அதிலும் கலந்துகொண்டு தமது பங்களிப்பினை வழங்கினார்கள். எமது கல்லூரியிலிருந்தே அதிகளவு சாரண மாணவர்கள் மேற்படி பாசறை நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Sunday, 20 October 2013

கல்லூரிக்கு பழைய மாணவர் விஜயம்


எங்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும் ஒன்றியத்தின் முன்னாள் பொருளாளருமாகிய திரு .மனோகரன் குடும்பத்தினர் கடந்த மாதம் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி நிர்வாகத்துடனும், அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்களுடனும், கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட பின்னர் எமது ஒன்றியத்தின் சிறந்த வேலைத்திட்டங்களான Ridge Way மண்டப புனரமைப்பு, புதிய சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை பார்வையிட்டதுடன் கல்லூரி வளர்ச்சித் திட்டங்களையும் கேட்டு அறிந்து  கொண்டார். அத்துடன் மாணவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உபகரணங்களுக்காக 20 ஆயிரம் ரூபாவை நன்கொடையாக கொடுத்துள்ளார். இவரின் இந்தச் சேவையை யுகே பழைய மாணவர் ஒன்றியம் மிகவும் பாராட்டுகின்றது.



நன்றி .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.


Thursday, 17 October 2013

வெற்றி பெற்றவர்களை கௌரவித்தல்

2013ஆம் ஆண்டில் எமது கல்லூரியிலிருந்து பல்வேறு வகையான போட்டிகளிலும் மாகாண நிலையிலும் தேசிய நிலையிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து விருந்துபசாரம் வழங்கினார்கள். ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.கு.ஜேம்ஸ்பஸ்ரியன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுமார் நூறு மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 
கல்லூரியின் உப அதிபர் திரு.செ.சிவகுமாரன், விளையாட்டுத்துறை முதல்வர் திரு.நா.திருக்குமாரன், தமிழ்த்துறை ஆசிரியை செல்வி.பூ.ஜெயமலர் ஆகியோர் மாணவர்களின் திறன்களையும் வெற்றிகளையும் புகழ்ந்து பாராட்டினர். கல்லூரியின் அதிபர் சிறப்புரையாற்றினார். தேசிய நிலையின் ஈட்டி எறிதல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற செல்வி.பா.ரஜிதா, தேசிய மட்டத் தமிழ்த் தினப் போட்டிகளில் கட்டுரை ஆக்கத்தில் 2ஆம் இடம்பெற்ற செல்வி.தே.காயத்திரி மற்றும் சமஸ்த லங்கா நடனப் போட்டிகளில் தேசிய நிலை வெற்றி பெற்றோர், பெரு விளையாட்டுக்களான துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எல்லே போட்டிகளிலம் மெய்வன்மைப் போட்டிகளிலும் மாகாண நிலையில் வெற்றி பெற்றவர்கள், நாட்டிய நாடகம், கணித நாடகப் போட்டி என்பவற்றில் மாகாண வெற்றி பெற்றோர் எனப் பலதரப்பட்ட வெற்றிகளைப் பெற்ற
மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விளையாட்டுப் பயிற்றுனர்களான எமது பழைய மாணவர்கள் திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிந்தன், திரு.க.கஜேந்திரன் ஆகியோர் மாணவர்களால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஆசிரியர் கழக செயலாளர் திருமதி.யோ.பங்கயச்செல்வி நன்றியுரை கூறினார். மாணவர் சார்பில் செல்விகள் தே.காயத்திரி, ச.பிரியங்கா ஏற்புரை நிகழ்த்தினர்.

See More Photos


 தகவல் : பாடசாலை அபிவிருத்தி சபை  


கண்ணதாசனை நினைவு கூர்வோம்

அக்டோபர் 17: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரருமான கண்ணதாசனின் நினைவு நாள் இன்று..


"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"
"உனக்குக் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு"

"உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது"

அக்டோபர் 17: உலக வறுமை ஒழிப்பு தினம்

உலக வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17ம் தேதி உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகின் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Palace of King Ravana Over 5000 years ago

See Video

Wednesday, 16 October 2013


நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடும் சூழலும் மாறும்.

நான் இளைய சமுதாயத்துக்காக ஓர் அமைப்பை  ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஓர் இளைஞர்கள் அமைப்பு . அந்த அமைப்பின்  முக்கிய நோக்கம், 'என்னால் எதைக் கொடுக்க முடியும்’ அல்லது 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை, நம்மவர் மனதில் உருவாக்குவதுதான். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து, அதைச் செயல்படுத்துவதுதான் இந்த அமைப்பின்  நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். 'எனக்கு மட்டுமே வேண்டும்’ என்ற சுய நல எண்ணம்தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது.. ஊழல் செய்ய தூண்டுகிறது . அந்த எண்ணத்தை மாற்றி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடு மாறும்.

'நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம்மவர்க்கு  வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்கு மட்டும் தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும்.
நம்மவர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்குத் தயாரா? வாருங்கள் நண்பர்களே!'' நமது வழத்தை  கட்டி எழுப்புவோம்.
 அப்துல் கலாம்



அக்டோபர் 16: வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.. (1799)

இந்தியாவை ஆக்கிரமித்திருந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தை துணிவோடு எதிர்கொண்டு போரிட்டு, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிட்ட நாள் இன்று!

அக்டோபர் 16: இன்று உலக உணவு தினம்

அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது எமது கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்டோபர் 16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Tuesday, 15 October 2013

ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

யுகே பழைய மாணவர் ஒன்றிய  காரியதரசி   தாமோதரம்பிள்ளை – கமலநாதன்  அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட  வாழ்த்துச் செய்தி யை  சுழிபுரம்
பழைய மாணவர் சங்க காரியதரசி இரா ஸ்ரீரங்கன் சபையில்வாசித்தார்.
 

ஆண்டு தோறும் எமது விக்ரோறியாக் கல்லூரியில் நடைபெற்று வரும் ஆசிரியர் தினம் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் முகமாக நடைபெற்று வருகின்றது. இத்தினத்தில் ஆசிரியர்கள் யாவரும் தங்களிடம் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களையும் நல்லொழுக்கத்துடனும், சிறந்த பெறுபேறுகளுடன் பல்கலைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப்படுவதற்கு உறுதிமொழி எடுத்தல் வேண்டும். மாணவர்களின் கல்விவளர்ச்சியும், அவர்களின் வாழ்வின் உயர்ச்சியும் ஆசிரியர்களான உங்கள் கையில் தான் உள்ளது.
இதற்காக ஆசிரியர்கள் விடாமுயற்சியுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபடுவீர்கள் என நம்புகின்றோம். எமது கல்லூரி ஆசிரியர்களின் தன்னலமற்ற மனப்பூர்வமான சிறந்தசேவையை யுகே பழைய மாணவர் ஒன்றியம் மிகவும் பாராட்டி நிற்கின்றது. கல்லூரியின் கல்வி  வளர்ச்சிக்கும் விளையாட்டுத் துறைக்கும் எமது ஒன்றியம் எதிர்காலத்தில் வேண்டிய முழு ஆதரவையும் தரும் என உறுதி கூறுகின்றோம்.
இத்தினத்தில் அதிபர் திரு. வ. ஸ்ரீகாந்தன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுகுக்கும், யுகே பழைய மாணவர் ஒன்றியம் தமது நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றது.
          
                          நன்றி
தாமோதரம்பிள்ளை – கமலநாதன்,
காரியதரசி,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.