Thursday 17 January 2013

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை தவறவிட்ட மாணவர்களுக்கு அடுத்த மாதம் விசேட பரீட்சை

சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சையை தவறவிட்ட மாணவர்களுக்கு அடுத்த மாதம் விசேட பரீட்சை நடத்த பரீட்சைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சில பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இலக்காகி
2012ஆம் ஆண்டு க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற முடியாது போன  மாணவர்களுக்கென விசேட பரீட்சை அடுத்த மாதம் 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் பத்திரங்களை ஏற்கும் இறுதித் திகதி நேற்றுடன் முடிவடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெப்ரவரி 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில் இந்த பரீட்சையை நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் செயலகம் தெரிவித்துள்ளது.
 
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பாடசாலை அதிபருக்கூடாகவும் வெளிவாரிப் பரீட்சார்த்திகள் நேரடியாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கனவே பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதற்கமைய விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளரின் செயலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த மாதம் 17ஆம்,  18ஆம், 19ஆம் திகதிகளில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாத நிலை தோன்றியது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு அடுத்த மாதம் விசேட பரீட்சையை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.