Sunday 26 August 2012

கல்லூரிக்குச் சென்ற பழைய மாணவர் சிவப்பிரகாஸ்

கட்டாறில் தொழில் புரிந்து வரும் எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவன் திரு.சிவப்பிரகாஸ் அவர்கள் தனது கல்லூரியை மறவாது கல்லூரிக்கு விஜயம் செய்து அதிபருடனும்,நிர்வாகத்துடனும் கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களைக் கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.
See Photos

Thursday 23 August 2012

மரண அறிவித்தல் - இ.சங்கர் (செங்காரபிள்ளை) (உரிமையாளர், பாரதி பதிப்பகம்)



சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த பத்திரிகையாளரும், பாரதி பதிப்பக உரிமையாளருமாகிய இ.சங்கர் நேற்று (23.08.2012) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற பூரணபாக்கியத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இந்திரராசாசெல்லம்மா தம்பதியரின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் தையல்நாயகி தம்பதியரின் அன்பு மருமகனும், கலாநிதி, அறிவழகன் (கணித புள்ளிவிவரவியல்துறை யாழ். பல்கலைக்கழகம்), வைத்தியகலாநிதி அறிவுச் செல்வன் (யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமதி தயாநீ, வைத்தியகலாநிதி கலைமகள் (கண்டி போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனும், ஆரபி, இலக்கியா, அறிவுஆதித்தன், அறிவுஅரங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஆனைப்பந்தி நாவலர் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை 25.08.2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மு.ப 10 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :செ. அறிவழகன் (மகன்).
தொடர்புகளுக்கு
செ. அறிவழகன் (மகன்). - 273/1, நாவலர் ஒழுங்கை, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.                                                
,

Tuesday 21 August 2012

2012 ஆம் ஆண்டின் வீரச்சாதனையாளர்கள்

2012 ஆம் ஆண்டின் வீரச்சாதனையாளர்களின் வரிசையில் எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் மாணவர்கள் மாவட்டரீதியிலும் மாகாணரீதியிலும்,தேசிய ரீதியிலும் கல்வியிலும், விளையாட்டிலும்,நுண்கலைகளிலும் சிறந்த வெற்றி பெற்று பல தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.
இந்த மாணவர்கள் பெற்றுத்தந்த அனைத்துச் சாதனைகளும் கல்லூரியின் வளர்ச்சிக்கு உந்துகோலாக அமைந்துள்ளதுடன் கல்லூரியின் சிறப்பும்,திறமையும் உலகிற்கு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
இவர்களின் இந்தச் சாதனைகளைப் பாராட்டி அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பழைய மாணவர்கள் எல்லோரும் நன்றியையும்,பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.அத்துடன் இந்த வீரச்சாதனையாளர்களின் புகைப்படங்கள் கல்லூரி வளாகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
இவ்வீரச் சாதனைகளைப் பெற்றுத்தந்த எமது கல்லூரி மாணவர்களுக்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

கனடா பழைய மாணவர் ஒன்றியத்தின் கோடைகால ஒன்று கூடல்

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தம் நடைபெறும் கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் ஆவணி மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியில் இருந்து மாலை 3.00 மணிவரை Morning Side Park இல் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் சிறுவர் விளையாட்டுப் போட்டிகள்,பெரியோர்களுக்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் சுடச்சுட மேற்கத்தைய கோடைகால உணவுகள்,இன்னும் பல மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இந்த ஒன்றுகூடலுக்கு கனடாவில் வசித்து வரும் அனைத்து விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர்களையும் வருகைதந்து கலந்து சிறப்பிக்குமாறு,கனடா பழைய மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
கனடா பழைய மாணவர் ஒன்றியம் எமது கல்லூரிக்குத் தேவையான பல வேலைத்திட்டங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக கல்வி மேம்பாட்டிற்காகவும்,விளையாட்டிற்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார்கள்.தற்போது எமது கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விரிவுபடுத்தி அதன் மூலம் யாழ்மாவட்டத்தில் எமது கல்லூரி முதன்மை வாய்ந்த தரமான கல்லூரியாக வருவதற்கு உழைத்து வருகிறார்கள்.இவர்களின் இந்த வேலைத்திட்டம் நல்லமுறையில் வெற்றி பெற அனைத்து பழைய மாணவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
" யுகே பழைய மாணவர் ஒன்றியம் "

Monday 20 August 2012

கல்லூரிக்குச் சென்ற பழைய மாணவர் NTVR

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர் NTVR என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் இராசலிங்கம் அவர்கள் தனது குடும்பத்துடன் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு நடக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்திடம் அறிந்து கொண்டதுடன் கல்லூரியையும் சுற்றிப்பார்த்து கல்லூரிக்கு வேண்டிய தேவையைப் பற்றியும் அறிந்து கொண்டுள்ளார்.NTVR அவர்கள் ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் கற்றலுக்கான உதவிகளை தொடர்ந்தும் செய்து வருபவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

Sunday 19 August 2012

Australian OSA Get-together and Dinner


சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் மெல்பேர்ன் கிளை நடாத்தும் வருடாந்த மாலை அமுது நிகழ்வு எதிர்வரும் ஆவணிமாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு Dandenong Menzesஎன்னும் வீதியில் உள்ள Menzes மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முழு ஆதரவையும் தரும்படி அவுஸ்திரேலிய பழைய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.
அவுஸ்திரேலியப் பழைய மாணவர் சங்கம் கடந்த பல வருடங்களாக எமது கல்லூரிக்கு பல அபிவிருத்தித் திட்டங்களிலும்,மாணவர்களின் கல்வி ஊக்கிவிப்புத் திட்டங்களிலும் கல்லூரிக்காக தொடர்ந்தும் உழைத்து வருகின்றது.எமது கல்லூரிக்கு எல்லாவிதத்திலும் பக்க பலமாக செயல்ப்பட்டு கல்லூரியை முதல் தரமான கல்லூரியாக்குவதற்கு தொடர்ந்தும் ஆணிவேராக நின்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் செய்துவரும் எல்லா வேலைத்திட்டங்களும் எமது கல்லூரியின் ஆண்டறிக்கையில் யாவரும் பார்த்து அறிந்து கொள்ளலாம். எமது கல்லூரியின் ஆண்டறிக்கையின் பின் இவர்கள் ஐந்து இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
இவர்களின் இச்சேவையைப் பாராட்டி யுகே பழைய மாணவர் ஒன்றியம் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.அத்துடன் இவர்கள் நடாத்தும் மாலை அமுது நிகழ்ச்சிக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் அனைத்துப் பழைய மாணவர்களும் ஒன்று கூடி முழு ஆதரவையும் வழங்கும்படி யுகே பழைய மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

See Invitation

Friday 17 August 2012

நெல்லியான் கிராமமும் பழைய மாணவர்களின் வீடுகளும்

இலங்கையின் வடபால் அமைந்த சுழிபுரத்தே நெல்லியான் என்பதோர் அழகிய கிராமமாகும். வயல்களால் சூழப்பட்ட இக்கிராமத்தினில் சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். துரதிஷ்டவசமாக கடந்த மூன்று தசாப்தங்களாக எதிர்கொண்ட யுத்த சூழ்நிலை காரணமாக இக்கிராம மக்கள் 1995 தொடக்கம் இடம்பெயர்ந்தே வாழ்ந்து வந்தனர். மேலும் இக்கிராமம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால் கடந்த 27 வருடங்களாக யாருமே மீளக்குடியேற முடியாத நிலை காணப்பட்டது. கிராமம் முழுவதுமே பற்றைகள் வளர்ந்து காடாகக் காட்சியளிக்கிறது. கூரைகளற்ற வீடுகள் அநாதரவாக் காட்சியளிக்கின்றன.தற்பொழுது முதல் ஆளாக வைரவர் மீளக்குடிஏறுகின்றார்.
இக்கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து வாழும் குடும்பங்கள் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆவார்கள்.
See Photos
பழைய மாணவர்களின் வீடுகள்



Saturday 11 August 2012

30,000 Rs Donation

நோர்வேயில் வசித்து வரும் எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர் திரு.திருமதி.செல்வக்குமார் அவர்கள் எமது தாய் நாட்டிற்கு சென்றபோது தான் கல்வி கற்ற கல்லூரிக்கு சென்று கல்லூரியின் நிலவரங்களை அறிந்து கொண்டதுடன் 30,000 ரூபா பணத்தொகையை நன்கொடையாகக் கல்லூரியின் அபிவிருத்திக்காக வழங்கியுள்ளார். அத்துடன் திரு .திருமதி.செல்வக்குமார்அவர்கள் கல்லூரிக்கான மாணவ முதல்வர்களுக்குரிய சின்னம் சூட்டும் விழாவிற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்களுக்குரிய சின்னங்களை வழங்கினார்கள். அவரின் இச்சேவையைப் பாராட்டி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழையமாணவர்கள் எல்லோரும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் எமது விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்கள் தமது சொந்தங்களை பார்ப்பதற்காக தாய் நாட்டிற்குச் செல்லும் பொது நீங்கள் கல்விகற்ற உங்கள் புனிதத் தளமாகிய உங்கள் விக்ரோறியாக்கல்லூரிக்கு சென்று கல்லூரியின் செயற்ப்பாடுகளை அறிந்து கொள்வதுடன் கல்லூரியின் அபிவிருத்திக்கு உங்கள் உதவிகளைச் செய்ய விரும்பின் கல்லூரி நிர்வாகத்துடன் மட்டும் தொடர்பு கொண்டு உங்கள் நன்கொடைகளை வழங்கவும்.உங்கள் நன்கொடைகளின் விபரங்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் இணையத்தளத்தில் நீங்கள் விரும்பினால் சிறப்புச் செய்தியாக வெளியிடப்படும்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

Tuesday 7 August 2012

விக்ரோறியாக் கல்லூரிக்கு மேலும் ஒரு புதிய கட்டிடம்

அண்மையில் எமது கல்லூரிக்கு விஜயம் செய்த இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அவர்கள் எமது கல்லூரிக்கு 130 இலட்சம் ரூபா செலவில் புதிய இரண்டு மாடிக்கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.இக்கட்டடம் ஐம்பது அடி நீளமும் இருபத்தைந்து அடி அகலமும் கொண்ட இரண்டு மாடிக்கட்டடம் ஆகும்.இக்கட்டடத்திற்குஎண்பது இலட்சம் ரூபாவும் மிகுதிஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களையும் இலங்கை அரசாங்கம் நிதியுதவியாக ஒதுக்கியுள்ளது.இக்கட்டடத்தில் Language Lab, Distance Learning Lab ,Mathematics Lab, computer Lab போன்றன அமைக்கப்பட்டுள்ளது.இத்தகைய வேலைத்திட்டத்தால் எமது கல்லூரி மாணவர்களின் கல்வித்திறமைகள் வளர்ச்சி அடைய உள்ளன. இத்தகைய வேலைத்திட்டத்திற்கு அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,அத்துடன் யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தமது நன்றியை இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றது.
OSA-UK
See Documents and Plans

Sunday 5 August 2012

Shoes donation for students

அமரர்.க.தவத்துரை அவர்களது ஞாபககார்த்தமாக அவரது மகன் திரு.த.குமாரதாசன்(Swiss) அவர்களினால் கல்லூரியின் கல்வி ஆர்வமுள்ள, பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியை விக்ரோறியாக் கல்லூரி வெற்றி கொண்டது

அகில இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தினரால் நடாத்தப்படும் 15 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டப் போட்டியில் இன்று சாவகச்சேரி இந்துக் கல்லூரியும் (தேசிய பாடசாலை) விக்ரோறியாக் கல்லூரியும் மோதிக் கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 139 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கே.கிரிசாந் 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரி சார்பில் சிந்துஜன் 30ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி இந்து கல்லூரி 90 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. இதில் இ.கரன் 25 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். 49 ஓட்டங்களினால் விக்ரோறியாக் கல்லூரி வெற்றி பெற்றது. இதன் மூலம் விக்ரோறியாக் கல்லூரி இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தினால் நடாத்தப்படும் சுற்றுப் போட்டியின்அடுத்த சுற்றில் விளையாடும் தகுதியைப் பெற்றுக் கொண்டது.

Saturday 4 August 2012

End of the Second Term 2012

எமது கல்லூரியில் இரண்டாம் தவணை நிறைவு நாளின் போது முதன்நிலை பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல், உச்சப் புள்ளி பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசில் வழங்கல், பெற்றோர் சந்திப்பு போன்றவற்றிற்கான புகைப்படங்கள்.

Cricket Tournament

விக்ரோறியாக் கல்லூரிக்கும் திரு இருதையக் கல்லுரிக்கும் இடையில் நடைபெற்ற அகில இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தின் துடுப்பாட்டப்போட்டியில் விக்ரோறியா அணி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. திரு இருதையக் கல்லூரி பெற்ற 220 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 104 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.
துடுப்பாட்டச் சங்கத்தால் நடாத்தப்படும் சுற்றுப் போட்டியில் இரண்டாம் சுற்றில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு நாளை ஞாயிற்றுக் கிழமை சாவகச்சேரி இந்துக் கல்லூரியுடன் (National School) பங்குபற்றும் துடுப்பாட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரி வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

Thursday 2 August 2012

Cricket எங்களுக்கும் சொந்தம்


Read More

கிளிநொச்சி மத்திய கல்லூரியை விக்ரோறியாக் கல்லூரி வெற்றி கொண்டது

இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தினால் நடாத்தப்படும் துடுப்பாட்டச்சுற்றுப் போட்டித் தொடரில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. விக்ரோறியாக் கல்லூரி 36 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எஸ்.கோகிலதாஸ் 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். கே.யுவராஜ் 35 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 21 பந்துப் பரிமாற்றங்களில் 67 ஓட்டங்களுக்கு தனது முழு இலக்குகளையும் இழந்தது. விக்ரோறியாக் கல்லூரி அணித்தலைவர் கே.பிரசாத் 08 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 04 இலக்குகளைக் கைப்பற்றினார். இப்போட்டி விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.