Friday 1 February 2013

கல்வியை நோக்கி எமது பாதை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் தெரிகிறது. இந்த சந்தர்பத்தில் எமது பாடசாலையின் வளர்ச்சியில் நாம் பங்குகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தை மீட்டுப் பார்க்கிறோம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த சைவப்பிள்ளைகளும்  கல்விகற்க வேண்டும் என்ற உயரிய இலட்சியத்துடன் எமது பிரதேசத்தின் கல்வியின் பிதாமகர் அமரரர் நிற்சிங்கம் கனகரத்ன முதலியார் அவர்களால் 1876 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டு, அமரர் செல்லப்பா முதலியார் அவர்களாலும் அமரர் தம்பையா அவர்களாலும் நிருவகிக்கப்பட்டு வந்த எமது விக்டோ றியா கல்லூரிக்கு 136 வயதுகள்.

புகழ்பூத்த அதிபர்களையும் அர்ப்பணிப்புள்ள  பல ஆசிரியர்களையும் கண்ட எமது பாடசாலை, பலநூறு கல்விமான்கள் மற்றும் பல நல்ல மனிதர்கள் உருவாகி உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து புகழ் பரப்ப அடித்தளம் இட்ட பெருமையுடன் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

பழைய மாணவர்கள் தமக்கு அறிவுப்பாலூட்டிய அன்னையை மறவாது, தமது  வருங்கால தம்பி தங்கையர் தம்மிலும் மேலான நிலைக்கு வரவேண்டும் என்ற ஒரேநோக்கத்திற்காக நேரடியாகவோ அவுஸ்திரேலியா, கனடா, லண்டன்  மற்றும் சுழிபுரம் பழைய மாணவர் சங்கங்களினூடக தம்மாலான உதவிகளைப் புரிந்து வருகின்றனர்.
 

அந்தவகையில் சுமார் 18 வருடங்களுக்கு முன்பு அந்நேர அதிபர் திரு சந்திரபாலன் அவர்களின் முயற்சியாலும் லண்டனில் வசித்து வந்த பழைய மாணவர்களது உத்வேகத்தலும் உருப்பெற்றதே எமது யூ. கே. பழைய மாணவர் ஒன்றியம்.

பாடசாலையின் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு உறுதுணையாக இருந்துவந்த எமது ஒன்றியம் கடந்த 10 மாத காலத்தில் உத்வேகம் பெற்று செயல்படுவது யாவரும் அறிந்ததே.

பாடசாலையின் கல்வி, விளையாட்டு,  கலை மற்றும் மாணவரின் ஆளுமை விருத்தி போன்றவற்றினைகக் கட்டிஎழுப்புவதை நோக்காகக் கொண்டே செயற்பட்டு வருகிறோம்.

சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிற்கு, திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க ஆசிரியர்கள், அடிப்படையறிவும் தன்னார்வமும் கொண்ட மாணவர்கள், கற்றலுக்கான  சூழல் மற்றும் இவையனைத்தையும் உச்ச அளவில் பயன்படுத்தும் (நிருவகிக்கும்) அதிபர் மற்றும் நிருவாகக்  கட்டமைப்பு என்பன அவசியமாகும்.

எம்மைப்பொறுத்தவரையில், எமது பாடசாலையில்,மிகச்சிறந்த அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம் என்பன உள்ளதோடு நிருவாகமும் மிகச்சிறப்பாகவே நடை பெறுகிறது.

ஆகவே, கற்றல் சூழல் மற்றும் மாணவரின் அடிப்படையறிவு என்பவற்றிலேயே  அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதை  நாம் உணர்கிறோம்.

ஒப்பீட்டு ரீதியில் கற்றல் சூழலை உருவாக்குவது உடனடியாகச் செய்து  முடிக்கக்கூடியது.  மாணவர் அடைவு மட்டத்தை உயர்த்துதல் என்பது, எமது பாடசாலையில் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மாணவர் தரத்தை உயர்த்தல் மற்றும் புதிதாக தரம் 6 இல் தரமான மாணவர்களைச் சேர்த்தல் என்பவற்றிலேயே  தங்கியுள்ளது.

ஆகவேதான், எமது நிருவாகத்தின் முதல் ஆண்டுப் பகுதியின் பெரும் காலப் பகுதியினைக்  கற்றல் சூழலை உருவாக்குதலில் கவனம் செலுத்திகொண்டிருக்கிறோம்.

"றிஜ்வே" மண்டபப் புனரமைப்பு மற்றும்  நிறுவுனர் குடும்பத்தினருடன் இணைந்து புதிய சிற்றுண்டிச்சாலை அமைத்தல்  என்பவற்றினை, எமது பல்வேறு வேலைத்திட்டங்களுள் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மேலும், புதிதாகச் சேரும் மாணவர்களின் தரத்தினைக் கூட்டுவதற்காக சில வேலைத்திட்டங்களை மேற் கொண்டு வருகிறோம். குறிப்பாக, எமது ஊட்டற் பாடசாலையான ஐக்கிய சங்கம் மற்றும் பாரதி, நாவலர் முன்பள்ளி ஆகியவை இவற்றில் அட ங்கும். இவற்றின் அறுவடைக்காக நாம் சிறிது பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

எமது மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர எம்மாலான முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம். இவ்விணையத் தளம் உருவாக்கப் பட்டத்தின் பிரதான நோக்கமும் அதுவே.இவ்விணையத்தள குழுவின் (திரு ரவிசங்கருடன் சேர்த்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து செயல்படும் அனைவரின்) அர்ப்பணிப்பான செயற்பாடு பாராட்டுதலுக்குரியது.

இவ்விணையத்தளம் உருவானதால் ஏற்பட்ட  எதிர்பாராத இன்ப அதிர்ச்சியான விடயம் என்னவெனில், எமது பாடசாலையின் அனைத்து  வெளிநாட்டுப்  பழைய மாணவர் சங்கங்களும் (அவுஸ்திரேலியா, கனடா மற்றும் லண்டன்) புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்துள்ளன.


எதிர் காலத்தில் எமது கல்லூரி மாணவர்கள் எல்லோரும் கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும் என்பதே எமது அவா.
 
இறுதியாக, எமது பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்காக, எமது அதிபரினால் விடப்படும் வேண்டுகோள்கள், எம்மால் முடிந்தளவு நிறைவேற்றி வைக்கப்படும் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.