Monday 16 June 2014

நாவலர் மணிவிழா

சுழிபுரம் நாவலர் மணிவிழா நிகழ்ச்சிகள் 2014
திரு சுந்தரம்பிள்ளை தலைமையில் நடைபெற உள்ளது.
(14.06.2014 தொடக்கம் 22.06.2014 வரை )
14.6.2014- விளையாட்டு நிகழ்ச்சிகள்
,17.6.2014- விளையாட்டு நிகழ்ச்சிகள்
21.6.2014-கலை நிகழ்ச்சிகள்

,22.6.2014- கலை நிகழ்ச்சிகள்
அனைவரும் வருக
 

Sunday 15 June 2014

Girls Cricket Champions - 2014

எங்கள் கல்லூரியின் பெண்கள் துடுப்பாட்ட அணியினர் மாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையிலானபோட்டிகளில் வெற்றி கொண்டு மாகாணச் சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம்முறைமாகாண மட்டத் துடுப்பாட்டப் போட்டிகள் ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. 

2014ம் ஆண்டில் இதுவரை நடைபெற்ற சகல போட்டிகளிலும் இவ்வணி வெற்றி பெற்றமை
குறிப்பிடத்தக்கதாகும்.2010ம் ஆண்டு மத்திய கல்வியமைச்சின் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில்பெண்களுக்கான துடுப்பாட்டமும் ஒன்றாக இணைத்துக்கொள்ளப்பட்டது. அவ்வருடத்திலிருந்து விக்ரோறியா பெண்கள் துடுப்பாட்ட அணி மாகாண மட்டத்தில் தொடர்ச்சியாக முதலிடம் பெற்றுவருகின்றது. 2010ம் ஆண்டு திருமதி.அ.வேலுப்பிள்ளை அவர்கள் அதிபராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட பெண்களின் துடுப்பாட்ட அணி தொடர்ந்து திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் அதிபராக பணியாற்றும் காலங்களிலும் முதன்மை வெற்றிகளைப் பெற்று இவ்வருடம் ஐந்தாவது தடவையாக சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2010ம், 2011ம் ஆண்டுகளில் செல்வி.சி.ஜெயரஞ்சனி அவர்களும் 2012ம் ஆண்டில் செல்வி.மா.கோபிகா 
அவர்களும் 2013ம் ஆண்டில் செல்வி.பா.ரஜிதா அவர்களும் 2014ம் ஆண்டில் செல்வி.சி.டிலானி அவர்களும் அணித்தலைவர்களாகச் செயற்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராக திரு.செ.சிவபாலசுந்தர் அவர்களும் தொடர்ந்து திரு.நா.திருக்குமாரன், திருமதி.ஜெயகௌரி ஆதித்தன் ஆகியோரும் தற்போது திரு.சி.சிவச்செல்வன் அவர்களும் இவ்வணிகளை வழிப்படுத்தி வந்துள்ளனர். 

அன்றிலிருந்து தொடர்ச்சியாக “விக்ரோறியன்ஸ்“ திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிர்தன் ஆகியோர் பயிற்றுநர்களாக சிறந்த பயிற்சிகளை வழங்கிவருகின்றனர். இவ்வணியினர் மாவட்ட, மாகாண, தேசிய நிலைகளில் போட்டிகளில் பங்குகொள்ளும் போது கல்லூரி ஆசிரியர்கள் இவர்களைப் பொறுப்பேற்று அழைத்துச் சென்று வெற்றிகளைப் பெற உதவுவார்கள். இவ் வீரர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பழைய மாணவர்கள் சத்துணவுகள், போக்குவரத்து வசதிகள், கோலவுடைகள் போன்றவற்றை தேவையறிந்து வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். 2012ம் ஆண்டில் விக்ரோறியாக் கல்லூரியின் பெண்கள் துடுப்பாட்ட அணி தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை வென்றமை குறிப்பிடத்தக்கதாகும். இம்மாணவிகள் பெறும் தொடர்ச்சியான வெற்றிகளால் உலகெங்கும் பரந்து வாழும் விக்ரோறியன்கள் 
பெருமைப்படுவதுடன் விக்ரோறியா அன்னையும் மகிழ்ச்சியடைகின்றாள்.

இவ் வருடம் வெற்றி பெற்ற அணியினர் கல்லூரிச் சமூகத்தினால் சிறப்பான முறையில் மதிப்பளிக்கப்பட்டனர்.

Wednesday 11 June 2014

Victoria College Conquers St.Johns' College

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் (SriLanka Cricket Association) நடாத்தும் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டிகளில் எமது கல்லூரி அணியினர் நேற்றைய தினம் St.Johns' College அணியினருடன் விளையாடி இலகுவான வெற்றியினைப் பெற்றுள்ளனர். இவ் வெற்றியின் மூலம் விக்ரோறியா அணியினர் இரண்டாம் சுற்றினுள் நுழைந்துள்ளனர். 

50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி 29 பந்துப் பரிமாற்றங்களில் சகல துடுப்புக்களையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது. 

ஜே.ஆரூசன் 27 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் இ.கரன் 22 ஓட்டங்களுக்கு 3 துடுப்புக்களையும், கு.கிரிசாந் 11 ஓட்டங்களுக்கு 2 துடுப்புக்களையும், ப.பிரியங்கன் 15 ஓட்டங்களுக்கு 2 துடுப்புக்களையும் கைப்பற்றினர். 111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய விக்ரோறியா அணி 27.5 பந்துப் பரிமாற்றங்களில் 6 துடுப்புக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. கு.கிரிசாந் 48 ஓட்டங்களையும், ப.பிரியங்கன் 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ச.கிரியந்தன் 19 ஓட்டங்களுக்கு 2 துடுப்புக்களையும், சி.புகழினியன் 38 ஓட்டங்களுக்கு 3 துடுப்புக்களையும் கைப்பற்றினார்கள். இதன் மூலம் விக்ரோறியா அணி 04 துடுப்புக்களால் வெற்றியீட்டியுள்ளது. 

Tuesday 10 June 2014

வெற்றியாளர்கள் கௌரவிப்பு‏

மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான துடுப்பாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற எமது கல்லூரி வீராங்கனைகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கல்லூரியில் இடம்பெற்றது. 

இதன்போது அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த கல்லூரியின் பழைய மாணவர் திரு.அ.சதானந்தமனுநீதி அவர்களும் அவரது புதல்வி செல்வி.திலகா சதானந்தமனுநீதி அவர்களும் அவர்களின் குடும்ப நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தமை விசேட அம்சமாகும். கல்லூரியைப் பார்வையிட வந்த இவர்கள் இன்றைய நிகழ்வுகளில் வீராங்கனைகளை கௌரவித்து சான்றிதழ்களையும் வெற்றிக் கேடயங்களையும் தமது கரங்களால் வழங்கி மதிப்பளித்தனர். 

கல்லூரி முதல்வர் திருமதி.ச.சிவகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகளின் போது முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்துகொண்டார். திரு.அ.சதானந்தமனுநீதி, 

திரு.வ.ஸ்ரீகாந்தன், பிரதியதிபர் திரு.செ.சிவகுமாரன் ஆகியோர் வீராங்கனைகளைப் பாராட்டியும் வாழ்த்தியும் உரையாற்றினர். திரு.அ.சதானந்தமனுநீதி அவர்கள் தமது உரையில் கல்லூரியின் சகல துறை வளர்ச்சியையும் முன்னாள் அதிபர்கள் ஆற்றிய மகத்தான சேவைகளையும் குறிப்பிட்டதுடன் புதிய அதிபரிடமிருந்தும் உயரிய பணியை எதிர்பார்ப்பதாகவும் அவருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராயிருப்பதாகவும் குறிப்பிட்டார். கல்லூரி வாசலிலிருந்து வீராங்கனைகள் அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


மாகாணத் தமிழ்த்தினப் போட்டி - 2014‏

மாகாண நிலையில் நடைபெற்ற தமிழ்த்தினப் போட்டிகளில் எமது கல்லூரியின் மாணவர்களான செல்வன்.கண்ணதாசன் சியாமளன் தனியிசை நிகழ்ச்சியிலும் செல்வி.மோகனப்பிரியா சுதாகரன் தனி நடனம் நிகழ்ச்சியிலும் 3ம் இடங்களை வெற்றிகொண்டனர்.

இவர்கள் இருவரையும் அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த எமது பழைய மாணவர் திரு.அ.சதானந்தமனுநீதி அவர்கள் பணப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இன்றைய தினம் இந்நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி.ச.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்வெற்றிகளைப் பெற்ற மாணவச்சிறார்களை பலரும் பாராட்டினார்கள்.

Sunday 8 June 2014

Net Ball - Under 17

விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயது வலைப்பந்தாட்ட அணியினர் மாகாண மட்டத்தில் 3ம் இடம் பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மிகப் போட்டியாக பல பாடசாலைகளும் பங்குகொள்ளும் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் எமது வீராங்கனைகள் பெறும் இவ்வெற்றி குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியதாகும். மாவட்ட மட்டப் போட்டிகளின் போது வெற்றி கொண்ட பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அணியிடம் மாகாண மட்டப் போட்டிகளின் போது ஒரு புள்ளியால் தோல்வியடைந்ததால் எமது கல்லூரி மூன்றாமிடத்திற்கான போட்டியில் கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. விளையாட்டுத்துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன், பயிற்றுநர் “விக்ரோறியன்“ திரு.கஜேந்திரன் ஆகியோரின் வழிப்படுத்தலுடன் திருமதி.வா.சத்தியலோகநாதன்,  திருமதி.மு.நாகராசா ஆசிரியர்களின் பொறுப்பில் இப் போட்டிகளுக்கு வீராங்கனைகள் சென்று வந்தனர்.

Friendly Cricket Match - Colombo Hindu College Vs Victoria College


எமது கல்லூரியின் 17 வயது துடுப்பாட்ட அணியினருக்கும் கொழும்பு இந்துக் கல்லூரியின் (இரத்மலானை) 19 வயது துடுப்பாட்ட அணியினருக்குமிடையிலான சிநேகபூர்வமான 15 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டி எமது கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. எமது கல்லூரி 02 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய விக்ரோறியா அணி 15 பந்துப் பரிமாற்ற நிறைவில் 05 துடுப்புக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. செல்வன்.கி.பிரசாந் 73 ஓட்டங்களைப் பெற்றுக் 

கொடுத்தார். பந்துவீச்சில் செல்வன்.ச.பிரதீசன் 16 ஓட்டங்களைக் கொடுத்து 02 துடுப்புக்களை வீழ்த்தினார். 

140 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி அணி 15 பந்துப் பரிமாற்றங்களில் 08 துடுப்புக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. 

செல்வன்.த.தேவகரன் 63 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் செல்வன்.இ.கரன் 05 ஓட்டங்களுக்கு 02 துடுப்புக்களையும் செல்வன்.கு.கிரிசாந் 24 ஓட்டங்களுக்கு 02 துடுப்புக்களையும் கைப்பற்றினர்.

கரப்பந்தாட்ட அணி கௌரவிப்பு

எமது கல்லூரியின் 17 வயது கரப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டமை தெரிந்த விடயமாகும். இவ்வணி வீரர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திருமதி.ச.சிவகுமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் கல்லூரி நுழைவாயிலிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்களின் கரகோசத்துடன் அழைத்துவரப்பட்டனர்.

கௌரவிப்பின் போது பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன், கரப்பந்தாட்ட அணிப் பொறுப்பாசிரியர் திரு.க.திருக்குமாரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். 

இவ்வணியின் பயிற்றுநராக திரு.செந்தூரன் அவர்கள் பணியாற்றி வருகின்றார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசியமட்டப் போட்டிகளில் செல்வன்.சாந்தராஜ் தலைமையிலான இவ் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Milo Cup 2014 - Netball Champions

மைலோ நிறுவனம் நடாத்திய 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகளில் எமது கல்லூரி அணி யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளில் சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பலம் வாய்ந்த வலைப்பந்தாட்ட அணிகளைக் கொண்ட பாடசாலைகள் எனக் கருதப்படும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி போன்றவற்றை வெற்றி கொண்டு யாழ்ப்பாண மாவட்டச் சம்பியன்களாக விக்ரோறியா அணி வெற்றிபெற்றுள்ளது. 

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை 19:14 புள்ளிகள் என்ற நிலையிலும் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தை 16:14 என்ற அடிப்படையிலும் இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை 20:19 என்ற புள்ளிகளின் அடிப்படையிலும் இவ் வெற்றிகள் பெறப்பட்டுள்ளன. 

இதன் மூலம் தேசிய ரீதியில் நடைபெறவுள்ள வலைப்பந்தாட்டப் போட்டிகளில் எமது கல்லூரி பங்குபற்றத் தெரிவாகியுள்ளது.

Saturday 7 June 2014

SriLanka School Cricket Association - Cricket Tournament

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் (SriLanka School Cricket Association) நடாத்தும் துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வருடம் மேற்படி சுற்றுப் போட்டியில் எமது கல்லூரியின் 17 வயதுப் பிரிவினர் பங்குகொள்கின்றனர். மாவட்ட நிலையிலான இச்சுற்றுப் போட்டியில் எமது கல்லூரி அணியினருக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமான மோதல் இன்று நடைபெற்றது. 50 பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. 

இவ்வணியினர் விக்ரோறியா வீரர்களின் களத்தடுப்புக்கு முகம் கொடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி 41.5 பந்து பரிமாற்றங்களில் 158 ஓட்டங்களுக்கு சகல துடுப்புக்களையும் இழந்தனர். 159 ஓட்டங்களை வெற்றிக்கான இலக்காகக் கொண்டு களமிறங்கிய விக்ரோறியா அணி 23.1 பந்துப் பரிமாற்றங்களில் 3 துடுப்புக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று 07 துடுப்புக்களால் இலகுவான வெற்றியைப் பெற்றது.

முன்னதாக யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் தி.மிதுஷன் 28 ஓட்டங்களை அதிகூடியதாகப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் கு.கிரிதரன் 18 ஓட்டங்களுக்கு 03 துடுப்புக்களையும் கி.பிரசாந் 25 ஓட்டங்களுக்கு 02 துடுப்புக்களையும் கைப்பற்றியிருந்தனர். 

விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பாக கி.பிரசாந் 82 ஓட்டங்களையும் சி.கோகுலராஜ் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் குவித்தனர். விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் போட்டி நடைபெற்றது. 

விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர் திரு.சி.சிவச்செல்வன், துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன், பயிற்றுநர்கள் “விக்ரோறியன்ஸ்” திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிதரன் ஆகியோர் கல்லூரி அணியினரை வழிப்படுத்தினர்.