Monday 26 May 2014

Volley Ball Champions - 2014

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் முல்லைத்தீவு,

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மைதானத்தில் சென்ற சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றது.மாவட்டச் சம்பியன்களான விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவினர் இப்போட்டிகளில் பங்கு கொண்டனர். தாம் கலந்துகொண்ட சகல போட்டிகளிலும் வெற்றி கொண்ட எமது அணி இறுதி ஆட்டத்தில் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியை எதிர்த்தாடியது. 

மூன்று சுற்றுக்களைக் கொண்ட இப் போட்டியில் எமது வீரர்கள் இரண்டு நேர் சுற்றுக்களை வெற்றி கொண்டு மாகாண சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக மாகாண சம்பியன்களான 17 வயது அணியினர் தொடர்ந்து தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.சி.சிவச்செல்வன், கரப்பந்தாட்டப் பொறுப்பாசிரியர் திரு.க.திருக்குமரன்,பயிற்றுநர் திரு.செந்தூரன் மற்றும் திரு.த.தவரத்தினம் ஆசிரியர் ஆகியோர் இப்போட்டிகளின் போது வீரர்களை வழிப்படுத்தினர். 

Athletic Meet - 2014 (Zonal Level)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மைப் போட்டிகள் இவ் வாரத் 

தொடக்கத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. எமது கல்லூரியிலிருந்து பங்கு பற்றிய 

வீர வீராங்கனைகள் பின்வரும் வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

11 - 1ம் இடங்கள்
09 - 2ம் இடங்கள்
05 - 3ம் இடங்கள்

மேற்படி வெற்றிகளைப் பெற்ற வீர வீராங்கனைகள் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள மாகாண மட்டப் 

போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதிகளைப் பெற்றுள்ளனர்.இவ் வெற்றிகளைப் பெறுவதற்காக 

விளையாட்டுத் துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன் ஆசிரியர் அவர்களும் “விக்ரோறியன்“ 

திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிதரன் ஆகியோரும் உரிய பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்தியுள்ளனர்.


Friday 23 May 2014

எமது பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கு

கடந்த புதன்கிழமை (21.05.2014) அன்று எமது பாடசாலையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. சிவபாதசுந்தரனார் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்,  எதிர்வரும் 2016ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள சுமார் 50 மாணவர்கள் பங்குபற்றிப் பயன்பெற்றனர்.
யாழ் மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் DR. செ. கண்ணதாசன் இக்கருத்தரங்கினை நடாத்தினார். 
கல்வி கற்கின்ற முறைகள், ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ளும் முறைகள்;  குறிக்கோளொன்றை அமைத்து அதைநோக்கி முன்னேறுதல் மற்றும் சுய ஆய்வு போன்ற விடயங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
மாணவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இக்கருத்தரங்கு விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

பாரதி கலை மன்ற 32 வது ஆண்டு நிறைவு விழாவும்-சுப்பையா அரங்க திறப்பு விழாவும்


Saturday 17 May 2014

ஸ்கந்தாவை வென்றது விக்ரோறியா

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான துடுப்பாட்டப்போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற விக்ரோறியாக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஐம்பது பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் விக்ரோறியா அணி எட்டு துடுப்புக்களை இழந்து 223 
ஓட்டங்களைப் பெற்றது. இதில் கி.பிரசாந் அதிரடியாக 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஸ்கந்தா அணி சார்பில் சி.ரஜிதன் 33 ஓட்டங்களுக்கு 03 துடுப்புக்களை வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா அணி 37 பந்துப் பரிமாற்றங்களுக்கு சகல துடுப்புக்களையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. த.காதியன் 69 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இ.கரன் 29 ஓட்டங்களுக்கு 4 துடுப்புக்களையும் ப.ஐங்கரன் 09 ஓட்டங்களுக்கு 2 துடுப்புக்களையும் கைப்பற்றினார்கள். 57 மேலதிக ஓட்டங்களால் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றி பெற்றது. 


Mahindodaya Technical Laboratory - Work In Progress


மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட கணனிக்கூடம்

ஆயிரம் பாடசாலை அபிவருத்தித் திட்டத்தின் கீழ் எமது கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் அமையவுள்ள கணனிக்கூடத்திற்கான தளபாடங்களில் ஒரு தொகுதி மத்திய கல்வி அமைச்சினால் அண்மையில் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
See More Photos

Monday 12 May 2014

New Principal

எமது கல்லூரியின் அதிபர் திரு..ஸ்ரீகாந்தன் அவர்கள் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து புதிய அதிபராக  ருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் வடமாகாணக்கல்வியமைச்சின் செயலாளரால் 
நியமிக்கப்பட்டுள்ளார்மானிப்பாய் சோதி வேம்படி வித்தியாசாலையின் அதிபராக கடமையாற்றிய இவர் வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகக் கொண்டவர்இன்று காலை புதிய அதிபர் தனது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்சிவகாமி சமேத நடேசப் பெருமானின் விஷேட பூஜைகளில் கலந்து கொண்ட பின் பதில் அதிபர் திரு செ.சிவகுமாரன் அவர்களால் ஆசிரியர் மாணவர்களுக்கு புதிய அதிபர் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் வாழ்த்தி ஆசியுரையாற்றினார். புதிய அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் உரையாற்றிய பின் ஆசிரியர்கள் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பூரணகும்பம் மாலை மரியாதையுடன் அவர் வரவேற்கப்பட்ட போது பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாக சபையினர் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாக சபையினர் வருகை தந்திருந்தனர்.


Sunday 4 May 2014

Provincial Level Sports Meet -2014

மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக எமது கல்லூரியின் ஆறு அணிகள் இம்முறை தெரிவுசெய்யப்பட்டுள்ளன. மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இவ் வாய்ப்பு கிட்டியுள்ளது.
 
17 வயது ஆண்கள் கரப்பந்தாட்ட அணி
17 வயது பெண்கள் வலைப்பந்தாட்ட அணி
19 வயது பெண்கள் துடுப்பாட்ட அணி
15 வயது ஆண்கள் கரம் அணி
15 வயது பெண்கள் கரம் அணி
19 வயது ஆண்கள் சதுரங்க அணி
என்பன இவையாகும். விளையாட்டுத் துறை முதல்வர், பொறுப்பாசிரியர்கள், பயிற்றுநர்களின் முயற்சியால் மாணவர்கள் தமது திறன்களை வெளிப்படுத்தி இவ் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இம்மாதம் நடுப்பகுதியில் மாகாண மட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கரப்பந்தாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம் வவுனியா மாவட்டத்திலும் கரம், சதுரங்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இடம்பெறும். இதில் பங்குபற்றுவதற்கான பயிற்சிகளில் மாணவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். 

All Island School Laboratory Competition - 2014

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களின் செயற்பாடுகளை மதிப்பீடு (Evaluation of School Laboratories) செய்யும் போட்டியில் எமது கல்லூரியின் இரசாயன ஆய்வுகூடம் மாகாண மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு தேசிய மட்டத்திலான மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இப் போட்டியினை ஒத்தியல்பு மதிப்பீட்டுக்கான இலங்கை தராதர அங்கீகார சபை (SriLanka Accreditation Board for Conformity Assesment) நடாத்துகின்றது.

மாகாண மட்டத்தில் வடக்கு மாகாணப் பாடசாலைகளிலிருந்து மூன்று ஆய்வுகூடங்கள் தெரிவாகியுள்ளன. இதில் எமது பாடசாலையின் இரசாயன ஆய்வுகூடமும் ஒன்றாகும். சென்ற வாரம் வருகை தந்த தேசிய மட்ட மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வுகூடத்தில் மாணவர்கள் மூலம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் பதிவேடுகள், செய்முறைப் புத்தகங்கள் (Practical Books) போன்றவற்றையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இரசாயனவியல் ஆசிரியர்களான செல்வி.கு.தாரணி, திரு.கு.கண்ணதாசன் ஆகியோரும் ஆய்வுகூட உதவியாளர் திரு.தா.பகீரதன் அவர்களும் இதற்கான ஒழுங்கமைப்புக்களைச் செய்திருந்தனர்.


Saturday 3 May 2014

நாவுக்கரசர் குருபூசை தினம்

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் வருடாந்தம் திருநாவுக்கரசர் குருபூசை தினம் எமது கல்லூரி இந்து மாணவர் மன்றத்தின் அனுசரணையுடன் கொண்டாடப்படுகின்றது. வழமை போல் இம்முறையும் திருநாவுக்கரசர் குருபூசை சிவபூமி முதியோர் இல்லத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாயின. கல்லூரி ஆசிரியர்கள் திரு.தி.தவரத்தினம், திருமதி.ம.சுவேந்திரன் ஆகியோரின் உரையினை் தொடர்ந்து மாணவர்களின் பேச்சு, நடனம், பண்ணிசை, இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்துமன்றத் தலைவன் செல்வன்.இ.நிரோஜன், மன்றப் பொறுப்பாசிரியர் திரு.இ.இராஜமுகுந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்திருந்தனர். ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். சிவபூமி அறக்கட்டளை செயலாளர் “விக்ரோறியன்“ திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர்) நன்றியுரை கூறினார். முதியோர் இல்லத்தில் வாழும் பெரியோர்கள், தாய்மார்கள், சர்வோதய நிறுவனச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

See More Photos

Thursday 1 May 2014

Under 17 Netball

யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் சென்ற வாரம் 
நெல்லியடி மத்திய கல்லூரி மைடானத்தில் நடைபெற்றன. எமது கல்லூரியின் 17வயதுப் பிரிவினர் 
இப்போட்டிகளில் கலந்து கொண்டு பிரபலமான கல்லூரிகளை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குள் 
நுழைந்தனர். இறுதிப்போட்டி அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்துடன் நடைபெற்றது. மிக 
விறுவிறுப்பான இப்போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் வெற்றி பெற்றது. மாவட்ட 
மட்டத்தில் விக்ரோறியாக்கல்லூரி 2ம் இடம் பெற்று மாகாணமட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளும் 
தகுதி பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக 17 வயதுப் பிரிவினர் மாகாண மட்டப் போட்டியில் பங்குகொள்ளவுள்ளனர். விளையாட்டுத்துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன், பொறுப்பாசிரியர்கள் 
திருமதி.பா.சுப்பிரமணியம், திருமதி.வா.சிவலோகநாதன், பயிற்றுநர் “விக்ரோறியன்” கஜேந்திரன் ஆகியோர் கல்லூரி அணியினை நெறிப்படுத்தினர்.

தமிழ்த்தினப் போட்டிகள் - 2014

சங்கானைக் கல்விக்கோட்டப் பாட சாலைகளுக்கிடையிலான இவ்வருடத்திற்கான தமிழ்த்தினப் போட்டிகள் 
தற்போது நடைபெற்றுள்ளன. ஒரு பாடசாலை ஆகக்கூடிய 25 போட்டிகளில் பங்கு கொள்ளலாம். எமது 
பாடசாலை 24 போட்டிகளில் பங்கு கொண்டது.14 போட்டிகளில் முதலாமிடத்தையும் 02 போட்டிகளில் 
இரண்டாமிடத்தையும் 02 போட்டிகளில் மூன்றாமிடத்தையும் வென்று சங்கானைக் கல்விக்கோட்ட 
பாடசாலைகளில் அதிக வெற்றியைப் பெற்ற பாடசாலையாக தெரிவாகியுள்ளது. முதலாம் இரண்டாம் 
இடங்களை வென்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள வலயமட்டப் 
போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளன. திருமதி.பங்கயச்செல்வி யோகநாதன் 
தலைமையிலான தமிழ்த்துறை கலைத்துறை சார்ந்த ஆசிரியர்கள் தமிழ்மொழித்தினப்போட்டிகளுக்காக 

மாணவர்களை வழிப்படுத்தியிருந்தார்கள்.