Tuesday 19 February 2013

வடக்கு கிழக்கில் கடந்த 5 வருடங்களில் 112 பாடசாலைகள் மூடப்பட்டன; கல்வி அமைச்சர்

இலங்கையில் கடந்த 5 வருடங்களுள் 350 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வடக்கு கிழக்குப் பகுதிகளில் 112  பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 350 அரசாங்கப் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.  
குறித்த பாடசாலைகளுக்கு வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படாததாலேயே பாடசாலைகள் மூடப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. எனினும் அதனை கல்வி அமைச்சர் நிராகரித்தார்.
அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டதற்கு மாணவர்களின் வருகை வீதம் குறைந்தமை, யுத்தம், பிரபலமான பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றமை, வீதி அபிவிருத்தி செய்யப்பட்டமை போன்றனவே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி 2005இல் 39 பாடசாலைகளும், 2006இல் 40 பாடசாலைகளும், 2007இல் 74 பாடசாலைகளும், 2008இல் 14 பாடசாலைகளும், 2009இல் 104 பாடசாலைகளும், 2010இல் 79 பாடசாலைகளும் மூடப்பட்டன.
இருப்பினும் 2009 இல் மூடப்பட்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளே அதிகமாகும்.
எனினும் இந்தக் காலப்பகுதியில் எந்தவொரு தேசிய பாடசாலையும் மூடப்படவில்லை எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.