Thursday 3 October 2013

யாழ். பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கொள்ளை

கூரை ஒடுகளைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுண் வரையான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் சுவாமிக்கு சாத்தியிருந்த வெள்ளி அங்கிகளும் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்டுள்ளவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்மீக ரீதியான எந்த அச்சமும் இன்றி திருடர்கள் அரங்கேற்றியுள்ள இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களிடையே அதிருப்தியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.


இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று புதன்கிழமை நள்ளிரவு மேற்படி ஆலயத்தின் மடப்பள்ளிக் கூரை வழியாக உள்நுழைந்த திருட்டுக் குழுவினர் அந்த அறையின் கதவுகளை உடைத்து ஆலயத்தினுள் நுழைந்துள்ளது. பின்னர் களஞ்சியத்தின் கதவுகளை உடைத்து உட்சென்று அங்கிருந்த குளிர்பானங்களை பருகியதுடன் பிஸ்கட் என்பவற்றையும் உண்டுள்ளனர்.
அந்த அறையிலிருந்த மண்வெட்டி, அலவாங்கு போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று ஆலய மூலஸ்தானத்திற்குச் செல்லும் கதவை உடைத்து எழுந்தருளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்து அதற்குள்ளிருந்த 150 பவுண் வரையான தங்க நகைகளைத் திருடியுள்ளனர்.

பூட்டுக்களை உடைத்து பெட்டகத்தை திறந்தே நகைகளைத் திருடியுள்ளனர். திருவிழாக் காலங்களில் சுவாமிக்கு சாத்துகின்ற அத்தனை நகைகளும் திருடப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத நாராயணப் பெருமானுக்கு சாத்தப்பட்டிருந்த மூன்று வெள்ளி அங்கிகளும் திருடப்பட்டுள்ளன. மேலும் ஆலயத்திலிருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

திருடர்கள் மிக நீண்ட நேரம் ஆலயத்திற்குள் தங்கி இக் கொள்ளை முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவர்கள் எந்தவித ஆன்மீக ரீதியான அச்சமும் இன்றி செயற்பட்டுள்ளனர். மாமிசம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டி பார்சல் மற்றும் திருடர்கள் புகைப்பிடித்து எறிந்த பீடி ஆகியன ஆலயத்தினுள் காணப்படுகின்றன.

ஆலயத்தின் உள் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஏணி மணிக்கோபுரத்தினுள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நகைகளைத் திருடிய பின்னர் திருடர்கள் மணிக்கோபுர வழியாக ஏறித் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இன்று காலைவேளை வழமையான பூசைக்காக ஆலயத்திற்கு வந்த அர்ச்சகர் ஆலயத்தின் உள் கதவுகள் உடைக்கப்பட்டிருக்கின்றமையையும் நகைகள் திருடப்பட்டிருக்கின்றமையும் கண்டு ஆலய பரிபாலன சபைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. ஆலயத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆலயத்திற்குள் எவரும் செல்ல வேண்டாமென்று தெரிவித்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 1987 ஆம் ஆண்டும் இந்த ஆலயத்தில் இதே போன்றதொரு பாரிய திருட்டு இடம்பெற்றது. இதன்போது பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான நகைகளும் பொருட்களும் திருடப்பட்டிருந்தன.