Thursday, 31 October 2013

தமிழர்கள் கல்வியில் மீண்டும் வரலாறு படைத்திட... Article by Dr S.Kannathasan (Victoria Old Student) Published on Newspaper Valampuri

"கல்வியிலே தலை சிறந்தவர்கள்" என்று எதிரிகளால் கூடப் பாராட்டப்பட்டவர்கள் நாங்கள். இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும்  தமிழர்களால் நிரம்பி வழிந்தும், பெரும்பாலான உயர் பதவிகளைத் தமிழர்கள் அலங்கரித்ததும் வரலாறு.
Read More

Wednesday, 30 October 2013

முத்தமிழ் விழா

எமது கல்லூரியில் இவ்வாண்டுக்கான முத்தமிழ் விழா இன்றைய தினம் றிஜ்வே மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. முத்தமிழ் மன்றத் தலைவி செல்வி.அனோஜிதா சிவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ”விக்ரோறியன்” செல்வி.இ.இராதா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இசை, நடனம், ஆதிவாசிகள் நடனம், நாட்டுக்கூத்து, நாடகம், பாராளுமன்ற அமர்வு போன்ற பல சுவையான நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற்றன. தமிழ்த்துறை, அழகியல்துறை சார்ந்த ஆசிரியர்களின் வழிப்படுத்தலில் மாணவர்களின் பல்வேறு திறன்களையும் வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக இவை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் நடைபெற்ற தமிழ்த்தினப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

Tuesday, 29 October 2013

World Bank Visit

இன்று எமது கல்லூரியின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக உலகவங்கியின் இலங்கைப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாகாண, வலயம் என்பவற்றைச் சார்ந்த கல்வி அதிகாரிகளும் கல்லூரிக்கு வருகை தந்தனர். 
பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள், இணைப்பாடவிதான வெற்றிகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் விருத்திக்கான செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடியும் ஆவணங்களைப் பார்வையிட்டும் திருப்தி தெரிவித்தார்கள். ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எமது கல்லூரி செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதும் ஆலோசனைகள் வழங்குவதும் இவர்களின் வருகையின் நோக்கமாயிருந்தது. எமது ஊட்டல் பாடசாலையான ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலைக்கும் சென்ற இக்குழுவினர் அங்கும் பாடசாலை வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடி திருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
 

Monday, 28 October 2013

சாரணர் பிரதம ஆணையாளர் விருது

எமது கல்லூரியின் சாரணவீரர் நிரோஜன் இலங்கையின் இரண்டாவது சாரணர் உயர் விருதாகிய பிரதம ஆணையாளர் விருதினைப் பெற்றுள்ளார். க.பொ.த.உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் இவர் பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குகொள்பவராவார். மாணவமுதல்வராகவும் பணியாற்றுகின்றார். அண்மையில் நடைபெற்ற வருடாந்த சாரணர் மாவட்ட ஒன்றுகூடலின் போது நிரோஜன் பிரதம ஆணையாளர் விருதினை மாவட்ட சாரண ஆணையாளரிடம் பெற்றுக்கொண்டார். அடுத்த விருதாகிய ஜனாதிபதி விருதினைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவரைக் கல்லூரியின் சாரணப் பொறுப்பாசிரியரும் மாவட்ட உதவி ஆணையாளருமான திரு.செ.சிவகுமாரன் (கல்லூரி உபஅதிபர்) அவர்கள் வழிப்படுத்துகின்றார்.

Thursday, 24 October 2013

மரண அறிவித்தல்- திரு கந்தசாமி சின்னத்தம்பி

அன்னை மடியில் : 13 டிசெம்பர் 1930 — ஆண்டவன் அடியில் : 23 ஒக்ரோபர் 2013

சுழிபுரம் பறாளை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னத்தம்பி அவர்கள் 23-10-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரிக்கா(பிரான்ஸ்), இரவிச்சந்திரன்(பிரான்ஸ்), ஜெயச்சந்திரன்(பிரான்ஸ்), அருட்சந்திரன்(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(இலங்கை), விக்னேஸ்வரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராஜா(பிரான்ஸ்), மங்களலட்சுமி(பிரான்ஸ்), கௌரிமனோகரி(பிரான்ஸ்), ஜெயராணி(பிரான்ஸ்), கிருஸ்ணமாலா(இலங்கை), ரேணுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Tuesday, 22 October 2013

Certificate Issuing Ceremony - Scouts

சாரணர் பாசறைகளில் பங்குபற்றி மாவட்ட நிலையில் வெற்றி பெற்ற சாரணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரியில் நடைபெற்றது. காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தினைத் தொடர்ந்து சாரணர் பொறுப்பாசிரியர்களின் வழிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அதிபர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Monday, 21 October 2013

G.C.E (O/L) exam view project

இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெறுகின்றன. வலிகாமம் கல்வி வலயத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வகுப்புக்கள் காலை பாடசாலை ஆரம்பமாகும் முன்னர் ஒரு மணி நேரமும் மாலை பாடசாலை நிறைவடைந்த பின்னர் ஒரு மணி நேரமும் நடைபெறுகின்றன. கல்லூரியின் பிரிவுத்தலைவர் திரு.நா.திருக்குமாரன் அவர்கள் இத்திட்டத்தின் இணைப்பாளராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிப்படுத்துகின்றார். பிரதான பாடங்களான கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், வரலாறு, தமிழ் ஆகியவற்றிற்கு கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டு பரீட்சையை மையமாகக் கொண்டு இத்திட்டம் நடைபெறுகின்றது. இன்று முதல் மேற்கூறிய பாடங்கள் ஒவ்வொரு நாளும் முழுநாட் செயலமர்வுகளாக மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு கருத்தரங்குகளாக முன்னெடுக்கப்படுகின்றன. எமது கல்லூரி மாணவர்களுடன் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை என்பவற்றின் மாணவர்களும் இணைந்துள்ளனர். க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் பரீட்சை அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.