Sunday, 8 June 2014

Milo Cup 2014 - Netball Champions

மைலோ நிறுவனம் நடாத்திய 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகளில் எமது கல்லூரி அணி யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளில் சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பலம் வாய்ந்த வலைப்பந்தாட்ட அணிகளைக் கொண்ட பாடசாலைகள் எனக் கருதப்படும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி போன்றவற்றை வெற்றி கொண்டு யாழ்ப்பாண மாவட்டச் சம்பியன்களாக விக்ரோறியா அணி வெற்றிபெற்றுள்ளது. 

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை 19:14 புள்ளிகள் என்ற நிலையிலும் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தை 16:14 என்ற அடிப்படையிலும் இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை 20:19 என்ற புள்ளிகளின் அடிப்படையிலும் இவ் வெற்றிகள் பெறப்பட்டுள்ளன. 

இதன் மூலம் தேசிய ரீதியில் நடைபெறவுள்ள வலைப்பந்தாட்டப் போட்டிகளில் எமது கல்லூரி பங்குபற்றத் தெரிவாகியுள்ளது.

Saturday, 7 June 2014

SriLanka School Cricket Association - Cricket Tournament

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் (SriLanka School Cricket Association) நடாத்தும் துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வருடம் மேற்படி சுற்றுப் போட்டியில் எமது கல்லூரியின் 17 வயதுப் பிரிவினர் பங்குகொள்கின்றனர். மாவட்ட நிலையிலான இச்சுற்றுப் போட்டியில் எமது கல்லூரி அணியினருக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமான மோதல் இன்று நடைபெற்றது. 50 பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. 

இவ்வணியினர் விக்ரோறியா வீரர்களின் களத்தடுப்புக்கு முகம் கொடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி 41.5 பந்து பரிமாற்றங்களில் 158 ஓட்டங்களுக்கு சகல துடுப்புக்களையும் இழந்தனர். 159 ஓட்டங்களை வெற்றிக்கான இலக்காகக் கொண்டு களமிறங்கிய விக்ரோறியா அணி 23.1 பந்துப் பரிமாற்றங்களில் 3 துடுப்புக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று 07 துடுப்புக்களால் இலகுவான வெற்றியைப் பெற்றது.

முன்னதாக யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் தி.மிதுஷன் 28 ஓட்டங்களை அதிகூடியதாகப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் கு.கிரிதரன் 18 ஓட்டங்களுக்கு 03 துடுப்புக்களையும் கி.பிரசாந் 25 ஓட்டங்களுக்கு 02 துடுப்புக்களையும் கைப்பற்றியிருந்தனர். 

விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பாக கி.பிரசாந் 82 ஓட்டங்களையும் சி.கோகுலராஜ் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் குவித்தனர். விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் போட்டி நடைபெற்றது. 

விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர் திரு.சி.சிவச்செல்வன், துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன், பயிற்றுநர்கள் “விக்ரோறியன்ஸ்” திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிதரன் ஆகியோர் கல்லூரி அணியினரை வழிப்படுத்தினர்.

Monday, 26 May 2014

Volley Ball Champions - 2014

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் முல்லைத்தீவு,

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மைதானத்தில் சென்ற சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றது.மாவட்டச் சம்பியன்களான விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவினர் இப்போட்டிகளில் பங்கு கொண்டனர். தாம் கலந்துகொண்ட சகல போட்டிகளிலும் வெற்றி கொண்ட எமது அணி இறுதி ஆட்டத்தில் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியை எதிர்த்தாடியது. 

மூன்று சுற்றுக்களைக் கொண்ட இப் போட்டியில் எமது வீரர்கள் இரண்டு நேர் சுற்றுக்களை வெற்றி கொண்டு மாகாண சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக மாகாண சம்பியன்களான 17 வயது அணியினர் தொடர்ந்து தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.சி.சிவச்செல்வன், கரப்பந்தாட்டப் பொறுப்பாசிரியர் திரு.க.திருக்குமரன்,பயிற்றுநர் திரு.செந்தூரன் மற்றும் திரு.த.தவரத்தினம் ஆசிரியர் ஆகியோர் இப்போட்டிகளின் போது வீரர்களை வழிப்படுத்தினர். 

Athletic Meet - 2014 (Zonal Level)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மைப் போட்டிகள் இவ் வாரத் 

தொடக்கத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. எமது கல்லூரியிலிருந்து பங்கு பற்றிய 

வீர வீராங்கனைகள் பின்வரும் வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

11 - 1ம் இடங்கள்
09 - 2ம் இடங்கள்
05 - 3ம் இடங்கள்

மேற்படி வெற்றிகளைப் பெற்ற வீர வீராங்கனைகள் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள மாகாண மட்டப் 

போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதிகளைப் பெற்றுள்ளனர்.இவ் வெற்றிகளைப் பெறுவதற்காக 

விளையாட்டுத் துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன் ஆசிரியர் அவர்களும் “விக்ரோறியன்“ 

திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிதரன் ஆகியோரும் உரிய பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்தியுள்ளனர்.


Friday, 23 May 2014

எமது பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கு

கடந்த புதன்கிழமை (21.05.2014) அன்று எமது பாடசாலையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. சிவபாதசுந்தரனார் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்,  எதிர்வரும் 2016ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள சுமார் 50 மாணவர்கள் பங்குபற்றிப் பயன்பெற்றனர்.
யாழ் மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் DR. செ. கண்ணதாசன் இக்கருத்தரங்கினை நடாத்தினார். 
கல்வி கற்கின்ற முறைகள், ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ளும் முறைகள்;  குறிக்கோளொன்றை அமைத்து அதைநோக்கி முன்னேறுதல் மற்றும் சுய ஆய்வு போன்ற விடயங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
மாணவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இக்கருத்தரங்கு விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

பாரதி கலை மன்ற 32 வது ஆண்டு நிறைவு விழாவும்-சுப்பையா அரங்க திறப்பு விழாவும்


Saturday, 17 May 2014

ஸ்கந்தாவை வென்றது விக்ரோறியா

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான துடுப்பாட்டப்போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற விக்ரோறியாக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஐம்பது பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் விக்ரோறியா அணி எட்டு துடுப்புக்களை இழந்து 223 
ஓட்டங்களைப் பெற்றது. இதில் கி.பிரசாந் அதிரடியாக 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஸ்கந்தா அணி சார்பில் சி.ரஜிதன் 33 ஓட்டங்களுக்கு 03 துடுப்புக்களை வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா அணி 37 பந்துப் பரிமாற்றங்களுக்கு சகல துடுப்புக்களையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. த.காதியன் 69 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இ.கரன் 29 ஓட்டங்களுக்கு 4 துடுப்புக்களையும் ப.ஐங்கரன் 09 ஓட்டங்களுக்கு 2 துடுப்புக்களையும் கைப்பற்றினார்கள். 57 மேலதிக ஓட்டங்களால் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.